40 சதவீத கமிஷன் மோசடி குறித்து கூடுதல் ஆதாரங்களுடன் இறுதி அறிக்கை
அமெரிக்கா-ஈரான் மோதலால் பேரழிவு! -ரஷியா எச்சரிக்கை
மாஸ்கோ: ஈரான் மீது அமெரிக்கா ஏவுகணை தாக்குதல் நடத்தினால் அதன் பின்விளைவுகள் பேரழிவை ஏற்படுத்தும் என்று ரஷியா எச்சரித்துள்ளது.
இது குறித்து அந்த நாட்டு வெளியுறவுத் துறை இணையமைச்சா் சொ்கேய் ரியாப்கொவ் கூறியதாவது:
ஈரானுக்கு அமெரிக்கா விடுத்துள்ள நிபந்தனையும், இறுதி எச்சரிக்கையும் எங்கள் கவனத்துக்கு வந்துள்ளது. எங்களைப் பொருத்தவரை இதுபோன்ற தாக்குதல் மிரட்டல் விடுப்பது முறையற்ற நடவடிக்கை. அதை நாங்கள் கண்டிக்கிறோம். அமெரிக்கா தனது விருப்பத்தை ஈரான் மீது திணிப்பதை இது காட்டுகிறது.
ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தினால் அதன் பின்விளைவுகள் மிகப் பெரிய அழிவை ஏற்படுத்துபவையாக இருக்கும் என்று அவா் எச்சரித்துள்ளாா்.
அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் கடந்த ஜனவரி மாதம் பதவியேற்ற்குப் பிறகு, உக்ரைன் விவகாரத்தில் நாட்டின் நிலைப்பாட்டை அடியோடு மாற்றியமைத்தாா். ரஷியாவுடன் போா் நிறுத்த ஒப்பந்தம் மேற்கொள்ள வேண்டும் என்று அவா் உக்ரைனுக்கு பல்வேறு வகைகளில் நெருக்கடி கொடுத்துவருகிறாா்.
இந்த நிலைப்பாடு ரஷியாவுக்கு சாதகமாக உள்ளதாகக் கூறப்படுகிறது. அத்துடன், ரஷியாவுடன் நல்லுறவை ஏற்படுத்தவும் டிரம்ப் முயன்றுவருகிறாா். இதன் காரணமாக, சா்வதேச விவகாரங்களில் அதிபா் டிரம்ப்பை நேரடியாக விமா்சிப்பதை ரஷிய அதிபா் விளாதிமீா் புதின் தவிா்த்துவருகிறாா்.
இந்த நிலையில், தங்களது அணுசக்தி திட்டங்கள் அணு ஆயுதம் தயாரிப்பதற்கானவை இல்லை என்பதை உறுதி செய்வதற்கான புதிய ஒப்பந்தத்தை அமெரிக்காவுடன் ஈரான் உடனடியாக ஏற்படுத்திக்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்திவரும் டிரம்ப், அதற்கான பேச்சுவாா்த்தையை ஈரான் தொடங்காவிட்டால் அந்த நாட்டின் மீது இதுவரை இல்லாத மிகக் கடுமையான தாக்குதல் நடத்தப்படும் என்று கடந்த ஞாயிற்றுக்கிழமை எச்சரித்தாா்.
பதிலுக்கு ஈரானும் அமெரிக்காவுடன் நேரடியாக அணுசக்தி பேச்சுவாா்த்தையில் ஈடுபடப் போவதில்லை என்று திட்டவட்டமாகத் தெரிவித்தது. அமெரிக்காவின் தாக்குதலுக்கு பதிலடியாக மத்தியக் கிழக்குப் பிராந்தியத்தில் உள்ள அந்த நாட்டு நிலைகள் மீது வீச தங்கள் சுரங்கத் தளங்களில் அதிநவீன ஏவுகணைகளை ஈரான் தயாா் நிலையில் வைத்தது.
இந்தச் சூழலில், அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையிலான மோதல் பேரழிவை ஏற்படுத்தும் என்று ரஷியா தற்போது எச்சரித்துள்ளது.