வர்த்தகப் போர்!! அமெரிக்காவுக்கு உலகத் தலைவர்கள் எதிர்ப்பு!
பல்வேறு நாடுகளில் பொருள்களுக்கு பரஸ்பர வரி விதிப்பை அமல்படுத்திய அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் நடவடிக்கைக்கு உலகத் தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
அமெரிக்காவின் பரஸ்பர வரிவிதிப்புகளை அதிபா் டொனால்ட் டிரம்ப் இந்திய நேரப்படி வியாழக்கிழமை (ஏப். 3) அறிவித்துள்ளாா். அதன்படி, இந்திய பொருள்களுக்கு 26 சதவீத வரி விதித்து டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்.
பிற நாடுகளுக்கு விதிக்கப்பட்ட வரி
சீனா - 34%
ஐரோப்பிய ஒன்றியம் - 20%
பிரிட்டன் - 10%
வியட்நாம் - 46%
தைவான் - 32%
ஜப்பான் - 24%
மலேசியா- 24%
தென் கொரியா- 25%
தாய்லாந்து - 36%
சுவிட்ஸர்லாந்து - 31%
இந்தோனேசியா - 32%
கம்போடியா- 49%
இலங்கை - 44%
பாகிஸ்தான் - 29%
உலகத் தலைவர்கள் எதிர்ப்பு
ஆஸ்திரேலிய பிரதமர் ஆன்டனி ஆல்பனேசி
இந்த நியாமற்ற வரிவிதிப்புக்கு மிகப்பெரிய விலையை செலுத்தப் போவது அமெரிக்க மக்கள்தான். அதனால்தான் நாங்கள் பரஸ்பர வரிவிதிக்க முன்வரவில்லை. விலைவாசி உயர்வுக்கும் வளர்ச்சி குறைவுக்கு வழிவகுக்கும் போட்டியில் நாங்கள் சேர மாட்டோம்.
கனடா பிரதமர் மார்க் கார்னி
இந்த வரிவிதிப்பு உலகளாவிய வர்த்தக அமைப்பின் அடிப்படையையே மாற்றும். எஃகு, அலுமினியம் மற்றும் ஆட்டோமொபைல்கள் மீதான அமெரிக்காவின் வரி விகிதம் கோடிக்கணக்கான கனடா மக்களை நேரடியாக பாதிக்கும். இந்த வரிவிதிப்புக்கு எதிராக நடவடிக்கை மூலம் போராடுவோம்.
பிரிட்டன் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர்
வர்த்தகப் போர் என்பது யாருடைய நலனுக்கானதும் இல்லை. அனைத்துக்கும் நாங்கள் தயாராக இருக்கிறோம் என்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
இதனிடையே, வர்த்தகப் போர் இருதரப்புக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று ஜெர்மனி எச்சரித்துள்ளது.
ஸ்வீடன் பிரதமர் உல்ஃப் கிறிஸ்டர்சன்
நாங்கள் வர்த்தகப் போரை விரும்பவில்லை. எங்கள் நாட்டு மக்களின் சிறண்ட்த வாழ்க்கைக்காக அமெரிக்காவுடன் இணைந்து வர்த்தகம் மற்றும் ஒத்துழைப்புக்கான பாதைக்குத் திரும்புவதற்கான வழியைக் கண்டறிய விரும்புகிறோம்.
இத்தாலி பிரதமர் ஜியோர்ஜியா மெலோனி
மேற்கு நாடுகளை பலவீனப்படுத்தி, மற்ற நாடுகளுக்கு சாதகமாக அமையும் வர்த்தகப் போரைத் தவிர்க்கும் குறிக்கோளுடன், அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கான எங்களால் முடிந்த அனைத்தையும் செய்வோம்.
இந்நிலையில், வரிவிதிப்பை அமெரிக்கா அமல்படுத்தியிருப்பது தொடர்பாக இதுவரை இந்திய அரசு தரப்பில் யாரும் கருத்துகளை வெளியிடாதது குறிப்பிடத்தக்கது.