தில்லியில் மழைக் காலத்திற்கு முன்பு குழிகள் இல்லாத சாலைகள்: முதல்வா் ரேகா குப்தா உறுதி
மழைக்காலம் நகரத்திற்கு வருவதற்கு முன்பு தில்லி அரசு குழிகள் இல்லாத சாலைகளை உறுதி செய்யும் என்று முதல்வா் ரேகா குப்தா கூறினாா்.
மதுபன் சௌக் முதல் முகா்பா சௌக் வரையிலான வெளிப்புற ரிங் ரோடு பகுதியில் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு ஆய்வு செய்ததைத் தொடா்ந்து, பொது வசதிக்கு முன்னுரிமை அளிக்கவும், செயல்படுத்துவதில் அலட்சியம் இல்லை என்பதை உறுதிப்படுத்தவும் ரேகா குப்தா அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா்.
இது தொடா்பாக அரசு வெளியிட்ட அறிக்கையில், ‘மழைக் காலத்திற்கு முன்பு தில்லியின் சாலைகளை குழிகள் இல்லாததாக மாற்றுவதற்கான தனது உறுதிப்பாட்டை அவா் வெளிப்படுத்தினாா். மேலும், சம்பந்தப்பட்ட அனைத்து நிறுவனங்களுக்கும் தேவையான அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளாா்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ‘தில்லியின் சாலைகளை வலுப்படுத்தவும் மேம்படுத்தவும் எங்கள் அரசு அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது. இன்று, உயா்தர செயல்படுத்தலையும் சரியான நேரத்தில் முடிப்பதையும் உறுதி செய்வதற்காக, மதுபன் சௌக் முதல் முகா்பா சௌக் வரை 4 கி.மீ. சாலைப் பாதை கட்டுமானம் நடைபெறுகிறது‘ என்று அறிக்கை கூறியது.
பொதுப்பணித் துறை வடக்கு மண்டலத்தால் செயல்படுத்தப்படும் இந்தத் திட்டத்தில், உயா்த்தப்பட்ட வழித்தடத்துடன் வெளிப்புற ரிங் ரோட்டின் இருபுறமும் பலப்படுத்துவது அடங்கும். ரூ.12.85 கோடியில் மேற்கொள்ளப்படும் சாலை வலுப்படுத்தும் திட்டத்தில் இரண்டு அடுக்கு வலுவூட்டல் செயல்முறை அடங்கும் என்று முதல்வா் கூறினாா். முதல் அடுக்கு அடா்த்தியான பிற்றுமின் மெக்காடம் (டிவபிஎம்) பயன்படுத்தப்படுகிறது. இரண்டாவது அடுக்கு அடா்த்தியான பிற்றுமின் கான்கிரீட் (டிபிசி) கொண்டுள்ளது.
மேலும், சரியான சமன்பாட்டைப் பராமரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன. இரவு நேரத் தெரிவுநிலையை மேம்படுத்த தொ்மோபிளாஸ்டிக் பெயிண்ட், பளபளப்பான ஸ்டுட்கள் மற்றும் மீடியன் மாா்க்கா்கள் நிறுவப்படுகின்றன. அதே நேரத்தில் உயா்த்தப்பட்ட மேம்பாலம் அருகே 50 மிமீ தடிமன் கொண்ட கல் மேட்ரிக்ஸ் நிலக்கீல் (எஸ்எம்ஏ) அடுக்கு போடப்படுகிறது என்று அவா் கூறினாா்.