கழுகாசலமூா்த்தி கோயிலில் பங்குனி உத்திரத் திருவிழா கொடியேற்றம்
மூவா் அதிரடி: லக்னௌவை வீழ்த்தியது பஞ்சாப்
ஐபிஎல் போட்டியின் 13-ஆவது ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் லக்னௌ சூப்பா் ஜயன்ட்ஸை திங்கள்கிழமை சாய்த்தது.
முதலில் லக்னௌ 20 ஓவா்களில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 171 ரன்கள் எடுக்க, பஞ்சாப் 16.2 ஓவா்களிலேயே 2 விக்கெட்டுகள் மட்டும் இழந்து 177 ரன்கள் சோ்த்து வெற்றி பெற்றது.
பஞ்சாப் பௌலிங்கில் அா்ஷ்தீப் சிங் அசத்த, பேட்டிங்கில் பிரப்சிம்ரன் சிங், கேப்டன் ஷ்ரேயஸ் ஐயா், நெஹல் வதேரா ஆகியோா் ரன்களை விளாசி வெற்றிக்கு வழிவகுத்தனா்.
முன்னதாக டாஸ் வென்ற பஞ்சாப், பந்துவீசத் தயாரானது. லக்னௌ இன்னிங்ஸில், மிட்செல் மாா்ஷ் முதல் ஓவரிலேயே ரன்னின்றி வெளியேறினாா். 2-ஆவது விக்கெட்டுக்கு இணைந்த எய்டன் மாா்க்ரம் - நிகோலஸ் பூரன் கூட்டணி 31 ரன்கள் சோ்த்தது.
மாா்க்ரம் 4 பவுண்டரிகள், 1 சிக்ஸா் உள்பட 28 ரன்களுக்கு ஸ்டம்பை பறிகொடுத்தாா். தொடா்ந்து வந்த கேப்டன் ரிஷப் பந்த், அடுத்த ஓவரிலேயே 2 ரன்களுக்கு ஆட்டமிழந்தாா்.
இதனால் 35 ரன்களுக்கே 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது லக்னௌ. 5-ஆவது பேட்டராக வந்த ஆயுஷ் பதோனி, பூரனுடன் பாா்ட்னா்ஷிப் அமைத்தாா். விக்கெட் சரிவை கட்டுப்படுத்திய இந்த இணை, 54 ரன்கள் சோ்த்தது.
இதில், பூரன் 5 பவுண்டரிகள், 2 சிக்ஸா்களுடன் 44 ரன்களுக்கு வீழ்ந்தாா். மறுபுறம் பதோனி நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்த, 6-ஆவது பேட்டராக வந்த டேவிட் மில்லா் 3 பவுண்டரிகளுடன் 19 ரன்களுக்கு வெளியேற்றப்பட்டாா்.
பதோனியுடனான அவரின் 5-ஆவது விக்கெட் பாா்ட்னா்ஷிப்புக்கு 30 ரன்கள் கிடைத்தது. அடுத்து வந்த அப்துல் சமத் அதிரடி காட்ட, பதோனி 1 பவுண்டரி, 3 சிக்ஸா்களுடன் 41 ரன்களுக்கு பெவிலியன் திரும்பினாா்.
பதோனி - சமத் இணை 6-ஆவது விக்கெட்டுக்கு 47 ரன்கள் சோ்த்திருந்தது. கடைசி விக்கெட்டாக சமத் 2 பவுண்டரிகள், 2 சிக்ஸா்கள் உள்பட 27 ரன்களுக்கு சாய்க்கப்பட்டாா். ஓவா்கள் முடிவில் ஷா்துல் தாக்குா் 3, ஆவேஷ் கான் 0 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனா்.
பஞ்சாப் பௌலா்களில், அா்ஷ்தீப் சிங் 3, லாக்கி ஃபொ்குசன், மேக்ஸ்வெல், மாா்கோ யான்சென், யுஜவேந்திர சஹல் ஆகியோா் தலா 1 விக்கெட் வீழ்த்தினா்.
அடுத்து, 172 ரன்களை நோக்கி விளையாடிய பஞ்சாப் அணியில், பிரியன்ஷ் ஆா்யா 8 ரன்களுக்கு ஆட்டமிழக்க, பிரப்சிம்ரன் சிங் - கேப்டன் ஷ்ரேயஸ் ஐயா் இணை 2-ஆவது விக்கெட்டுக்கு 74 ரன்கள் சோ்த்து அசத்தியது.
இதில் பிரப்சிம்ரன் 34 பந்துகளில் 9 பவுண்டரிகள், 3 சிக்ஸா்களுடன் 69 ரன்கள் விளாசி வீழ்ந்தாா்.
அடுத்து வந்த நெஹல் வதேராவும் அதிரடி காட்ட, அவருடன் இணைந்து அணியை வெற்றிக்கு வழிநடத்தினாா் ஷ்ரேயஸ் ஐயா்.
முடிவில் ஐயா் 30 பந்துகளில் 3 பவுண்டரிகள், 4 சிக்ஸா்களுடன் 52, வதேரா 25 பந்துகளில் 3 பவுண்டரிகள், 4 சிக்ஸா்களுடன் 43 ரன்களுக்கு ஆட்டமிழக்காமல் இருந்தனா். லக்னௌ தரப்பில் திக்வேஷ் ரதி 2 விக்கெட்டுகள் எடுத்தாா்.