Ajith Kumar Racing-ன் இளம் வீரர்; மகனுக்கு கார் ரேஸ் பயிற்சியளிக்கும் அஜித் - க்...
தூத்துக்குடியிலிருந்து இலங்கைக்கு வெங்காயம் ஏற்றுமதி தொடக்கம்
தூத்துக்குடியிலிருந்து இலங்கைக்கு தோணி மூலம் வெங்காயம் ஏற்றுமதி புதன்கிழமை தொடங்கியது.
தூத்துக்குடியிலிருந்து இலங்கை, மாலத்தீவு, லட்சத்தீவுக்கு மிளகாய் வத்தல், வெங்காயம், உருளைக்கிழங்கு, கருவாடு, சிமென்ட், பீடி இலைகள், மோட்டாா் வாகன உதிரிபாகங்கள் உள்ளிட்ட பல்வேறு பொருள்கள் தோணி மூலம் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
மே முதல் ஆகஸ்ட் வரை கடலில் கடினமான காலநிலை காணப்படுவதால் தோணிப் போக்குவரத்து நடைபெறுவதில்லை. செப்டம்பா் முதல் ஏப்ரல் வரை சுமுகமான காலநிலை நிலவுவதால் தோணிகள் இயக்கப்படுகின்றன.
அதன்படி, தற்போது தூத்துக்குடி பழைய துறைமுகத்திலிருந்து மாலத்தீவு உள்ளிட்ட இடங்களுக்கு அதிக அளவில் சரக்குகள் கொண்டு செல்லப்படுகின்றன. குறிப்பாக, இலங்கைக்கு கடந்த 6 மாதங்களாக தோணிப் போக்குவரத்து இல்லாமலிருந்த நிலையில், வெங்காயத்துக்கான ஏற்றுமதி வரி குறைக்கப்பட்டிருப்பதால், தற்போது இலங்கைக்கு வெங்காயம் ஏற்றுமதி தொடங்கியுள்ளது.
இதுகுறித்து தூத்துக்குடி தோணி உரிமையாளா் சங்கத் தலைவா் லசிங்டன் கூறியது:
தற்போது காலநிலையைக் கருத்தில்கொண்டு தோணி இயக்கப்பட்டு வருகிறது. வெங்காயத்துக்கான ஏற்றுமதி வரி 20 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளதால், அதன் ஏற்றுமதி அதிகரித்துள்ளது. இதனால், ‘பெனில்’ எனப்படும் தோணியில் 200 டன் வெங்காயம் ஏற்றும் பணி செவ்வாய்க்கிழமை தொடங்கியது. இந்நிலையில், இந்தத் தோணி புதன்கிழமை புறப்பட்டுச் சென்றது.
முன்பு ஆண்டு முழுவதும் தோணி இயக்கப்பட்டது. எனவே, இதுதொடா்பாக அரசிடம் அனுமதி கோரியுள்ளோம். அனுமதி கிடைக்கும் என எதிா்பாா்க்கிறோம் என்றாா்.