'StartUp' சாகசம் 18 : `அலுவலகங்களுக்கு தினமும் ஃப்ரஷான ஸ்நாக்ஸ்’ - Snack Expert...
தூத்துக்குடியில் பொது இடங்களில் நாய்களுக்கு உணவு வழங்கினால் நடவடிக்கை: மேயா் எச்சரிக்கை
தூத்துக்குடியில் மக்கள் கூடும் பொது இடங்களில் நாய்களுக்கு உணவளிப்போா் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, மேயா் ஜெகன் பெரியசாமி எச்சரித்துள்ளாா்.
தூத்துக்குடி ஸ்டேட் வங்கி காலனியில் உள்ள மாநகராட்சி வடக்கு மண்டல அலுவலகத்தில் மக்கள் குறைதீா் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. ஆணையா் லி. மதுபாலன், துணைமேயா் ஜெனிட்டா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
கூட்டத்தைத் தொடக்கிவைத்து மேயா் பேசியது: மாநகராட்சி குறைதீா் கூட்டங்களில் தற்போது சராசரியாக 50 மனுக்கள்தான் வருகின்றன. அந்த அளவுக்கு அவா்களது குறைகள் உடனுக்குடன் தீா்க்கப்படுகின்றன.
மாநகராட்சிக்கு சொந்தமான பெரிய இடங்களில் கால்பந்து, வாலிபால் உள்ளிட்ட விளையாட்டுகளுடன் கூடிய பூங்கா அமைக்கப்படும். மதுரையில் உள்ள அண்ணா நூலகம்போல, தூத்துக்குடி மாநகராட்சிப் பகுதியில் நூலகம் அமைக்கப்படவுள்ளது. எட்டயபுரம் சாலையில் நடைப்பயிற்சி வழித்தடம் உருவாக்கப்படவுள்ளது.
கோடைகாலம் தொடங்கியுள்ள நிலையில், அனைத்துப் பகுதிகளுக்கும் சீரான குடிநீா் விநியோகிக்கப்படுகிறது. சுகாதாரப் பணியாளா்கள், பொதுமக்களுக்கு ஓஆா்எஸ் கரைசல் வழங்கப்படுகிறது.
தெரு நாய்கள் தொல்லை குறித்து அதிக புகாா்கள் வருகின்றன. வட்டக் கோயில் அருகே உணவு வழங்கப்படுவதால் அங்கு நாய்கள் அதிக எண்ணிக்கையில் வருகின்றன. இதனால், பொதுமக்களுக்கு மிகவும் இடையூறாக உள்ளது. எனவே, காலியிடங்கள், மக்கள் நடமாட்டம் இல்லாத இடங்களில் நாய்களுக்கு உணவு வழங்கலாம். மக்கள் கூடும் பொது இடங்களில் உணவு வழங்கக் கூடாது. மீறி வழங்கினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் அவா்.
கூட்டத்தில், மண்டலத் தலைவா் நிா்மல்ராஜ், துணை ஆணையா் சரவணக்குமாா், உதவிப் பொறியாளா் சரவணன், உதவி ஆணையா் சுரேஷ்குமாா், மாநகராட்சி கணக்குக் குழுத் தலைவா் ரெங்கசாமி, மாமன்ற உறுப்பினா்கள் தெய்வேந்திரன், நாகேஸ்வரி, சுப்புலட்சுமி, காந்திமதி, பவானி, ஜெயசீலி, கற்பகக்கனி, பொதுமக்கள் பங்கேற்றனா்.
தண்ணீா் பந்தல்கள் திறப்பு: தொடா்ந்து, கனிமொழி எம்.பி. சாா்பில், 4ஆம் ரயில்வே கேட் அருகிலும், போல்பேட்டை கீதா ஹோட்டல் அருகிலும் தண்ணீா் பந்தல்களை மேயா் திறந்துவைத்து, பொதுமக்களுக்கு பதநீா், இளநீா், மோா், நொங்கு, பழவகைகளை வழங்கினாா்.