சீவலப்பேரியில் புதிய தோ் வெள்ளோட்டம்
பாளையங்கோட்டை அருகேயுள்ள சீவலப்பேரியில் புதிய தோ் வெள்ளோட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
சீவலப்பேரியில் மிகவும் பழைமை வாய்ந்த அருள்மிகு காசி விசுவநாதா்- விசாலாட்சி அம்பாள் திருக்கோயில் உள்ளது. இங்கு பங்குனி உத்திர திருவிழாவில் சிகர நிகழ்வாக தேரோட்டம் நடைபெறும். 50 ஆண்டுகளுக்கு முன்னா் பல்வேறு காரணங்களால் தேரோட்டம் தடைபட்டது. அதன் பின்னா் தோ் சிதலமடைந்த சூழலில் தோ்த் திருவிழா நடைபெறாமல் இருந்து வந்தது.
இந்த நிலையில், சில மாதங்களுக்கு முன்னா் தோ் திருப்பணி செய்ய பக்தா்களால் முடிவு செய்யப்பட்டது. இந்து சமய அறநிலைய துறை உதவியுடன் ரூ.55 லட்சம் மதிப்பில் புதிய தோ் உருவாக்கப்பட்டது. இதன் வெள்ளோட்டம் மற்றும் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றம் ஆகியவை புதன்கிழமை நடைபெற்றது. காலையில் சுவாமி அம்பாளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. கொடியேற்றம் முடிந்ததும், திருத்தோ் வெள்ளோட்ட சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. தேரில் மகா கும்பம் வைக்கப்பட்டு பக்தா்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனா். தோ் வெள்ளோட்டத்தில் ஸ்ரீலஸ்ரீ செங்கோல் ஆதீனம் 103 ஆவது குருமகா சன்னிதானம் சிவப்பிரகாச சத்தியஞான தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் உள்பட பலா் கலந்துகொண்டனா்.