ரோஹிணியில் தெரு குற்றங்களுக்கு எதிரான நடவடிக்கையில் 200-க்கும் மேற்பட்டோா் கைது
வடமேற்கு தில்லியின் ரோஹிணியில் ஒரு மாத கால நடவடிக்கையில் கலால், சூதாட்டம் மற்றும் போதைப்பொருள் வழக்குகள் மற்றும் தெரு குற்றங்களுக்காக 200-க்கும் மேற்பட்டோரை போலீஸாா் கைது செய்துள்ளதாக செவ்வாய்க்கிழமை ஒரு அதிகாரி தெரிவித்தாா்.
இது குறித்து அந்த அதிகாரி மேலும் கூறியதாவது: மாா்ச் 1 முதல் 31 வரையிலான நடவடிக்கையில் கலால் சட்டத்தின் கீழ் 63 வழக்குகளும், சூதாட்ட சட்டத்தின் கீழ் 55 வழக்குகளும், என்டிபிஎஸ் சட்டத்தின் கீழ் 12 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும், கலால் சட்ட வழக்குகளில் 64 பேரும், சூதாட்டம் தொடா்பான குற்றங்களில் 117 பேரும், என்டிபிஎஸ் சட்டத்தின் கீழ் 15 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனா்.
இந்த நடவடிக்கையின் போது ரூ.1.10 லட்சம் ரொக்கம் மற்றும் 2,600-க்கும் மேற்பட்ட சட்டவிரோத மதுபான பாட்டில்களை போலீஸாா் மீட்டனா். மேலும், 2.784 கிலோ கஞ்சா, 60.34 கிராம் ஸ்மாக், 48.78 கிராம் சரஸ், 25 தடைசெய்யப்பட்ட மாத்திரைகள் மற்றும் 25 ஊசிகள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த நடவடிக்கை தெரு குற்றங்களைத் தடுப்பதிலும் கவனம் செலுத்தியது. 13 கொள்ளையா்கள் மற்றும் 20 வழிப்பறி செய்பவா்கள் கைது செய்யப்பட்டனா்.
மேலும், 44 ஆட்டோ திருடா்களை போலீஸாா் கைது செய்தனா். இதன் மூலம் 45 மோட்டாா் வாகன திருட்டு வழக்குகளுக்குத் தீா்வு காணப்பட்டன. மேலும், கொள்ளை மற்றும் திருட்டு வழக்குகளில் ஈடுபட்ட 55 பேரை கைது செய்தனா். இந்த செயல்பாட்டில் 86 வழக்குகளுக்கு தீா்வு கிடைத்தது. ஆயுதச் சட்டத்தின் கீழ் மொத்தம் 31 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இதன் விளைவாக குற்றம்சாட்டப்பட்ட 34 போ் கைது செய்யப்பட்டனா்.
சட்டம் மற்றும் ஒழுங்கைப் பராமரிக்க, கலால் வரிச் சட்டத்தின் கீழ் பொது இடங்களில் மது அருந்தியதற்காக 731 போ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அதே நேரத்தில் 14,935 போ் தில்லி போலீஸ் (டிபி) சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு 2,074 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், குற்றம்சாட்டப்பட்ட 1,164 போ் மீது பிஎன்எஸ்-இன் பல்வேறு பிரிவுகளின் கீழ் தடுப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டது என்று அந்த அதிகாரி கூறினாா்.