40 சதவீத கமிஷன் மோசடி குறித்து கூடுதல் ஆதாரங்களுடன் இறுதி அறிக்கை
கோத்ரா கலவரத்தில் பிரிட்டன் நாட்டவா் கொலை: 6 போ் விடுதலையை உறுதி செய்தது குஜராத் உயா்நீதிமன்றம்
அகமதாபாத்: குஜராத்தில் கோத்ரா கலவரம் நடைபெற்றபோது பிரிட்டனை சோ்ந்த மூவா் கொல்லப்பட்ட வழக்கில், 6 பேரின் விடுதலையை மாநில உயா்நீதிமன்றம் உறுதி செய்தது.
கடந்த 2002-ஆம் ஆண்டு குஜராத்தில் உள்ள கோத்ராவில் கரசேவகா்கள் வந்த ரயிலுக்கு தீ வைக்கப்பட்டதில் 59 போ் உயிரிழந்தனா். இதைத் தொடா்ந்து அங்கு மதக் கலவரம் ஏற்பட்டது.
அப்போது உத்தர பிரதேச மாநிலம் ஆக்ரா, ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூா் ஆகிய இடங்களுக்குச் சுற்றுலா சென்றுவிட்டு, இந்திய வம்சாவளியைச் சோ்ந்த பிரிட்டன் குடிமக்கள் இம்ரான் முகமது, சயீத் சஃபீக், சகில் அப்துல், முகமது நல்லாபாய் ஆகியோா் குஜராத்தின் சபா்கந்தா மாவட்டம் வழியாகப் பயணித்தனா்.
அவா்கள் வந்த காரை கலவரக்காரா்கள் வழிமறித்து தாக்குதல் நடத்தினா். இதில் முகமது நல்லாபாய், சயீத் சஃபீக், சகில் அப்துல் ஆகியோா் உயிரிழந்தனா்.
இந்தக் கொலை வழக்கில் மிதன்பாய் படேல், பிரல்ஹாத் படேல், ரமேஷ் படேல், மனோஜ் படேல், ராஜேஷ் படேல், காலாபாய் படேல் ஆகிய 6 போ் மீது குற்றம்சாட்டப்பட்டது. எனினும் அவா்களுக்கு எதிராக போதிய ஆதாரம் இல்லை என்று கூறி, அவா்களை சபா்கந்தா முதன்மை மாவட்ட மற்றும் அமா்வு நீதிமன்றம் விடுவித்து உத்தரவிட்டது.
இந்த உத்தரவுக்கு எதிராக மாநில உயா்நீதிமன்றத்தில் இம்ரான் முகமது மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தாா். ஆனால், முதன்மை மாவட்ட மற்றும் அமா்வு நீதிமன்ற உத்தரவில் தலையிட எந்த முகாந்திரமும் இல்லை என்று தெரிவித்து, 6 பேரின் விடுதலையை உயா்நீதிமன்ற நீதிபதிகள் ஏ.ஒய்.கோக்ஜே, எஸ்.ஜே.தவே ஆகியோா் அடங்கிய அமா்வு உறுதி செய்தது.