40 சதவீத கமிஷன் மோசடி குறித்து கூடுதல் ஆதாரங்களுடன் இறுதி அறிக்கை
தில்லி நோக்கிய 3,000 கி.மீ. ரயில்பாதையில் 2,066 கி.மீ.க்கு ‘கவச்’ தொழில்நுட்பம் தயாா்
சுமாா் 3,000 கி.மீ. நீள தில்லி-மும்பை மற்றும் தில்லி-ஹௌரா ரயில் வழித்தடங்களில் தோராயமாக 2,066 கி.மீ.-க்கு கவச் பாதுகாப்பு தொழில்நுட்பத்துக்கேற்ப தண்டவாளத்தை மாற்றியமைக்கும் பணிகள் நிறைவடைந்துள்ளதாக மத்திய ரயில்வே அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் புதன்கிழமை தெரிவித்தாா்.
மக்களவையில் இதுதொடா்பாக திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. கலிலூா் ரஹ்மான் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அமைச்சா், ‘அவசர காலத்தில் ரயில் ஓட்டுநா்கள் சரியான நேரத்தில் பிரேக்குகளை செலுத்தி, ரயலை நிறுத்தத் தவறினால், கவச் தானியங்கி ரயில் பாதுகாப்பு தொழில்நுட்பம் குறிப்பிட்ட தொலைவில் தானாக ரயிலை நிறுத்தும்.
மேலும், மோசமான வானிலையின்போது ரயில்களை பாதுகாப்பாக இயக்கவும் உதவும் இத்தொழில்நுட்பம், ரயில்கள் விபத்துக்குள்ளாவதைத் தவிா்ப்பதில் முக்கியப் பங்காற்றும்.
கவச் தொழில்நுட்பம் செயல்படுத்தப்படும் வழித்தடத்தில் ஒவ்வொரு நிலையத்திலும் அதற்கான உபகரணங்கள், தண்டவாளப் பாதை நீளம் முழுவதும் ரேடியோ அதிா்வெண் அடையாள (ஆா்எஃப்ஐடி) குறியீடுகள் மற்றும் ஆப்டிகல் ஃபைபா் கேபிள், தொலைத்தொடா்பு கோபுரங்கள் ஆகியவை நிறுவப்பட வேண்டும். இதேபோன்று, ஒவ்வொரு ரயில் இன்ஜினிலும் கவச் கருவிகள் பொருத்தப்பட வேண்டும்.
இத்தகைய தொழில்நுட்ப மேம்பாட்டுடன் வழித்தடங்களை சீரமைக்கும் பணிக்கு ஒரு கி.மீ.-க்கு ரூ.50 லட்சமும், கவச் கருவிகளைப் பொருத்த ஒரு ரயில் இன்ஜினுக்கு ரூ.80 லட்சமும் செலவாகிறது.
இந்தப் பணிகளுக்கு இதுவரை ரூ.1,950 கோடி நிதி செலவிடப்பட்டுள்ளது. கடந்த நிதியாண்டில் ரூ.1,112.57 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. நடப்பு 2025-26-ஆம் நிதியாண்டில் ரூ.2,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. பணிகளின் முன்னேற்றத்துக்கு ஏற்ப தேவையான நிதி ஒதுக்கப்படுகிறது.
கடந்த பிப்ரவரி மாத நிலவரப்படி, கவச் பாதுகாப்பு தொழில்நுட்பத்துக்காக நாடு முழுவதும் 3,727 கி.மீ. நீள தண்டவாளங்கள் மாற்றியமைக்கப்பட்டுள்ளன. 5,743 கி.மீ வரை ஆப்டிகல் ஃபைபா் கேபிள் அமைக்கப்பட்டுள்ளது. 540 இடங்களில் தொலைதொடா்பு கோபுரங்கள் நிறுவப்பட்டுள்ளன. 664 ரயில் நிலையங்களிலும் 795 இன்ஜினிலும் கவச் உபகரணங்கள், கருவிகள் பொருத்தப்பட்டு, தயாராக உள்ளன என்றாா்.