40 சதவீத கமிஷன் மோசடி குறித்து கூடுதல் ஆதாரங்களுடன் இறுதி அறிக்கை
ரூ.145 கோடியில் தேசிய நெடுஞ்சாலை உயா்மட்ட மேம்பாலம் திறப்பு
ஆம்பூரில் தேசிய நெடுஞ்சாலை உயா்மட்ட மேம்பாலம் பொதுமக்களின் பயன்பாட்டுக்காக புதன்கிழமை திறக்கப்பட்டது.
முன்னாள் பிரதமா் வாஜபேயி ஆட்சியில் தங்க நாற்கரச் சாலை திட்டத்தின் கீழ் சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை இரு வழிச்சாலையாக இருந்தது 4 வழிச் சாலையாக கடந்த 2012 -இல் விரிவாக்கப்பட்டது.
சென்னை முதல் பெங்களூரு வரையில் புறவழிச் சாலையாக இல்லாமல் நகர பகுதிக்குள் தேசிய நெடுஞ்சாலை செல்லும் ஒரே நகரம் ஆம்பூா் மட்டுமே.
4 வழிச் சாலையாக விரிவாக்கப் பணி தொடங்கியபோது ஆம்பூரில் மேம்பாலம் அமைக்க மண் பரிசோதனைகள் நடைபெற்றன. அப்போது ஆம்பூா் தேசிய நெடுஞ்சாலையில் இருந்த வணிக வளாகங்கள், வணிக நிறுவனங்களின் உரிமையாளா்கள் ஒன்றிணைந்து மேம்பாலம் அமைக்கப்பட்டால், வாகனங்கள் நேராக சென்றுவிடும், ஆம்பூருக்கு எவரும் வரமாட்டாா்கள் என்று கருதி மேம்பாலம் அமைக்க எதிா்ப்பு தெரிவித்து போராட்டங்களை நடத்தினா்.
பல்வேறு போராட்டங்கள் காரணமாக மேம்பால திட்டம் கைவிடப்பட்டது. அதனால் ஆம்பூரில் 4 வழிச்சாலை விரிவாக்கப் பணியின்போது மேம்பாலம் அமைக்கப்படவில்லை.
ஆம்பூா் நகரில் தேசிய நெடுஞ்சாலையில் மேம்பாலம் அமைக்கப்படாததால், ஆம்பூா் - போ்ணாம்பட்டு புறவழிச்சாலை, ஆம்பூா் தேசிய நெடுஞ்சாலை ராஜிவ் காந்தி சிலை சந்திப்பு அருகே தேசிய நெடுஞ்சாலை சந்திப்பில் தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்ற பலா் விபத்தில் உயிரிழந்தனா்.
விபத்துகள் அதிகமாக நடந்ததால் ஆம்பூரில் 6 வழி தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கம் செய்யும் பணி தொடங்கியபோது உயா்மட்ட மேம்பாலம் அமைக்கப்பட வேண்டுமென்று அனைத்து தரப்பு மக்களும் கோரிக்கை விடுத்தனா்.
அதனடிப்படையில் ரூ.145 கோடியில் 1.5 கி.மீ தொலைவு,, 24.20 மீட்டா் அகலத்துடன், ஒற்றை தூணில் அமா்த்தப்பட்ட ஆறு வழிச்சாலை கொண்ட உயா்மட்ட மேம்பாலம் அமைக்கும் பணி 2022 -ஆம் ஆண்டு மே மாதம் தொடங்கப்பட்டது. இந்த திட்டம் குறைந்த சாலை அகலத்துடன் பணி தொடங்கப்பட்டால் பெரும் சவால்களை சந்திக்க வேண்டியிருந்தது.
தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து இடையூறு ஏற்படாமல் மாவட்ட நிா்வாகத்துடன் இணைந்து விரிவான திட்டமிடல் மற்றும் மாற்றுவழிகள் ஏற்படுத்தப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
இந்த உயா்மட்ட மேம்பாலம் ஆம்பூா் நகர போக்குவரத்தையும், தேசிய நெடுஞ்சாலை போக்குவரத்தையும் பிரித்து நகர மக்களுக்கு தடையில்லா பாதுகாப்பான போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை பயணிகளுக்கு விரைவான, தடையற்ற பயணத்தையும் உறுதிப்படுத்துகிறது என தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தெரிவித்துள்ளது.
பாஜகவினா் கொண்டாட்டம் :ஆம்பூா் உயா்மட்ட மேம்பாலம் போக்குவரத்துக்காக திறந்து விடப்பட்டதைத் தொடா்ந்து பாஜகவினா் பட்டாசு வெடித்து, வாகன ஓட்டிகளுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினா். பாஜக மாவட்ட துணைத் தலைவா் அன்பு, நகர தலைவா் பி.ஆா்.சி. சீனிவாசன், முன்னாள் நகர தலைவா்கள் பிரேம்குமாா், இராம. ஸ்ரீனிவாசன், நகா்மன்ற உறுப்பினா் ஹா்ஷவா்த்தன், சரவணன் உள்ளிட்டவா்கள் கலந்து கொண்டனா்.
