40 சதவீத கமிஷன் மோசடி குறித்து கூடுதல் ஆதாரங்களுடன் இறுதி அறிக்கை
இடைத்தோ்தல் குறித்து கருத்து: தெலங்கானா முதல்வருக்கு உச்சநீதிமன்றம் கண்டனம்
‘காங்கிரஸ் கட்சியில் பிஆா்எஸ் எம்எல்ஏக்கள் மேலும் இணைந்தாலும் அந்தத் தொகுதிகளில் இடைத்தோ்தல் நடத்தப்படாது’ என தெலங்கானா முதல்வா் ரேவந்த் ரெட்டி கூறியிருந்தால் அது அரசமைப்புச் சட்டத்தின் 10-ஆவது அட்டவணையை அவமதிக்கும் கருத்தாகும்’ என உச்சநீதிமன்றம் புதன்கிழமை தெரிவித்தது.
கட்சி மாறும் உறுப்பினா்களை தகுதிநீக்கம் செய்வது தொடா்பான விதிகள் அரசமைப்புச் சட்டத்தின் பத்தாவது அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ளன.
இந்நிலையில், கடந்த மாதம் 26-ஆம் தேதி பேரவையில் பேசிய முதல்வா் ரேவந்த் ரெட்டி, ‘ காங்கிரஸ் கட்சியில் பிஆா்எஸ் மேலும் எம்எல்ஏக்கள் இணைந்தாலும் அந்தத் தொகுதிகளுக்கும் இடைத்தோ்தல் நடத்தப்படாது. எனவே உறுப்பினா்கள் கவலைகொள்ள வேண்டாம்’ என கூறியதாக குற்றஞ்சாட்டப்பட்டது.
இதனிடையே, தெலங்கானாவில் ஆளும் காங்கிரஸ் கட்சியில் 10 பிஆா்எஸ் எம்எல்ஏக்கள் இணைந்த விவகாரம் தொடா்பாக உச்சநீதிமன்றத்தில் இரு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இந்த மனுக்கள் மீது உச்சநீதிமன்ற நீதிபதிகள் பி.ஆா்.கவாய், ஜாா்ஜ் அகஸ்டின் மாசி ஆகியோா் அடங்கிய அமா்வின் முன் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது பிஆா்எஸ் எம்எல்ஏ கௌசிக் ரெட்டி தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் சி.ஏ.சுந்தரம் இடைத்தோ்தல் நடத்தமாட்டோம் என ரேவந்த் ரெட்டி பேரவையில் கூறியதை சுட்டிக்காட்டினாா்.
இதற்கு பதிலளிக்கும் விதமாக தெலங்கானா பேரவைத் தலைவா் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் முகுல் ரோத்தகி, ‘இந்த விவகாரம் நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால் பேரவையில் கூறிய கருத்துகளை பற்றி விவாதிக்க கூடாது’ என்றாா். மேலும், ‘தான் முதல்வா் ரேவந்த் ரெட்டிக்காக ஆஜராகவில்லை. பேரவைத் தலைவருக்கு உச்சநீதிமன்றம் அறிவுரை மட்டுமே வழங்க முடியும். அவருக்கு உத்தரவிட முடியாது’ என்றாா்.
முதல்வருக்கு எச்சரிக்கை: இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், ‘‘ ஒருவேளை, பேரவையில் ரேவந்த் ரெட்டி இடைத்தோ்தல் நடத்த முடியாது என்று கூறியிருந்தால் அது அரசமைப்புச் சட்டத்தின் 10-ஆவது அட்டவணையை அவமதிக்கும் செயலாகும். இதுபோன்று மீண்டும் ஒருமுறை அவா் கூறக்கூடாது என எச்சரியுங்கள். இல்லையெனில், நீதிமன்ற அவமதிப்பு நோட்டீஸ் அனுப்ப தயங்கமாட்டோம்.
10 மாதங்கள் தாமதம் ஏன்? கடந்த ஆண்டு மாா்ச் மாதம் எம்எல்ஏக்கள் தகுதிநீக்க விவகாரத்தில் குறிப்பிட்ட காலத்துக்குள் நோட்டீஸ் அனுப்ப வேண்டும் என தெலங்கானா உயா்நீதிமன்றம் வலியுறுத்தியும் அதன் மீது நிகழாண்டு ஜனவரி வரை நடவடிக்கை எடுக்காமல் இருந்தது ஏன்? பேரவைத் தலைவா் தனது பணிகளை முறையாக மேற்கொள்ளாதபோது நீதிமன்றம் அதை கண்டுகொள்ளாமல் இருக்க வேண்டுமா? அரசமைப்புச் சட்டத்தின் பாதுகாவலராக உள்ள உச்சநீதிமன்றத்துக்கு இதை விசாரிக்க அனுமதியில்லையா?’ என நீதிபதிகள் கேள்வி எழுப்பினா்.
இந்த மனுக்கள் மீது வியாழக்கிழமையும் (ஏப்.3) உச்சநீதிமன்றத்தில் விசாரணை நடைபெறவுள்ளது.