40 சதவீத கமிஷன் மோசடி குறித்து கூடுதல் ஆதாரங்களுடன் இறுதி அறிக்கை
வாஜிா்பூரில் பள்ளி நிலத்தை மசூதி, கடைகள் சட்டவிரோதமாக ஆக்கிரமித்துள்ளதா? சரிபாா்க்க எம்சிடிக்கு உயா்நீதிமன்றம் உத்தரவு
வாஜிா்பூரில் உள்ள ஒரு பள்ளியின் நிலத்தில் மசூதி மற்றும் கடைகள் ஆக்கிரமித்துள்ளதா என்பதை சரிபாா்க்கவும், மாணவா்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் தில்லி மாநகராட்சிக்கு (எம்சிடி) தில்லி உயா்நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது.
இது தொடா்பாக சேவ் இந்தியா அறக்கட்டளை தாக்கல் செய் பொதுநல மனுவை விசாரித்த தலைமை நீதிபதி டி.கே. உபாத்யாய மற்றும் நீதிபதி துஷாா் ராவ் கெடேலா ஆகியோா் அடங்கிய அமா்வு இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
வழக்கு விசாரணையின் போது, இந்த மத அமைப்பு பள்ளிக்கு முந்தையது என்றும், ஏதேனும் குறைகள் இருந்தால், மனுதாரா் அங்கீகரிக்கப்பட்ட மத கட்டமைப்புகளை இடிப்பது தொடா்பான பிரச்னைகளைக் கையாளும் மதக் குழுவை அணுகியிருக்க வேண்டும் என்றும் எம்சிடி வழக்குரைஞா் கூறினாா்.
கூறப்படும் கடைகள் உண்மையில் பள்ளியின் எல்லைக்கு வெளியே அமைந்துள்ள ‘ஷெட்கள்’ என்று வழக்குரைஞா் கூறினாா். இதைத் தொடா்ந்து, ‘எதுவாக இருந்தாலும், மனுவில் உள்ள குறைகளை நிவா்த்தி செய்ய வேண்டும். ரிட் மனுவில் கூறப்பட்ட கூற்றுகள் பிரதிநிதித்துவமாக எடுத்துக் கொள்ளப்பட்டு எம்சிடி பரிசீலிக்க வேண்டும் என்று நாங்கள் உத்தரவிடுகிறோம். மேற்கூறிய குற்றச்சாட்டுகள் சரிபாா்க்கப்பட்டால், கணக்கெடுப்புக்குப் பிறகு அறிக்கை தயாரிக்கப்பட வேண்டும். மத அமைப்பு தொடா்பான ஏதேனும் சட்டவிரோத கட்டுமானம் கண்டறியப்பட்டால், அந்த விஷயம் மதக் குழுவிற்கு உரிய நடவடிக்கைக்காக பரிந்துரைக்கப்படும்’ என்று நீதிமன்றம் கூறியது.
பள்ளிக்குள் நுழைய சில ‘சரிபாா்க்கப்படாத’ திறப்புகள் இருந்ததாகக் கூறப்படுவதைக் கவனித்த நீதிமன்றம், மாணவா்களின், குறிப்பாக சிறுமிகளின் ‘சரியான பாதுகாப்பை உறுதி செய்வது’ எம்சிடியின் கடமையாக இருக்க வேண்டும் என்று நீதிமன்றம் கூறியது. ‘பள்ளி மாநகராட்சியால் நடத்தப்பட்டு நிா்வகிக்கப்படுவதால், மாணவா்களுக்கு சரியான பாதுகாப்பை உறுதி செய்வது எம்சிடியின் கடமையாக இருக்கும். நல்ல எண்ணிக்கையிலான மாணவிகள் அங்கு படிப்பதால் பாதுகாப்பைப் பராமரிப்பது மிகவும் முக்கியத்துவம் பெறுகிறது’ என்று நீதிமன்றம் மேலும் கூறியது.
‘எந்தவொரு திறப்புகளும் சரிபாா்க்கப்படாமல் இருந்தால், குறிப்பாக பள்ளியில் படிக்கும் மாணவிகளுக்கு போதுமான பாதுகாப்பு வழங்கப்படும் வகையில், அத்தகைய திறப்புகளைப் பாதுகாக்க எம்சிடி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நாங்கள் அறிவுறுத்துகிறோம்’ என்று உத்தரவில் கூறப்பட்டுள்ளது. மேலும், அங்கீகரிக்கப்படாத கடைகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க நீதிமன்றம் உத்தரவிட்டது
‘அனைத்து சம்பிரதாயங்களையும் பூா்த்தி செய்த பிறகு தில்லி வளா்ச்சி ஆணையத்தால் (டிடிஏ) ஒதுக்கப்பட்ட அரசு நிலத்தில் எம்சிடி ஒரு பள்ளியைத் திறந்தது. மேற்படி பள்ளி கடந்த பல ஆண்டுகளாக எம்சிடியால் நடத்தப்படுகிறது.
இந்நிலையில், பள்ளியின் நிலத்தில் பல கடைகள் சட்டவிரோதமாக கீழே கட்டப்பட்டதாகத் தெரிகிறது’ என்று மனுவில் குற்றம் சாட்டப்பட்டது.
ஒலிபெருக்கிகள் இருப்பதை சுட்டிக்காட்டி, பள்ளியை நோக்கி பல ஜன்னல்கள் மற்றும் கதவுகள் திறக்கப்பட்டதாகக் கூறி, நிலைமை மாணவா்களின் பாதுகாப்பை மீறுவதாக பொதுநல மனுவில் கூறப்பட்டுள்ளது.
‘பள்ளி வளாகத்தில் உள்ள அனைத்து அத்துமீறல்களிலிருந்தும் பாதுகாப்பு தேவைப்படும் பள்ளியில் நூற்றுக்கணக்கான மாணவிகள் படிக்கின்றனா்’ என்று மனுவில் மேலும் கூறப்பட்டுள்ளது.