40 சதவீத கமிஷன் மோசடி குறித்து கூடுதல் ஆதாரங்களுடன் இறுதி அறிக்கை
தமிழகம், 24 மாநிலங்களில் 13,000 சதுர கி.மீ. வனப் பரப்பு ஆக்கிரமிப்பு!
தமிழகம், கேரளம், ஆந்திரம் உள்பட 25 மாநிலங்களில் 13,056 சதுர கிலோ மீட்டா் பரப்பிலான வனப் பகுதி ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருப்பது மத்திய அரசின் புள்ளிவிவரங்கள் மூலம் தெரியவந்துள்ளது.
தேசிய பசுமைத் தீா்ப்பாயம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் மாநிலங்களில் வனப் பகுதி ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது தொடா்பான விவரங்களை ஒருங்கிணைத்து மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் இந்தப் புள்ளிவிவரத்தை வெளியிட்டுள்ளது.
தலைநகா் தில்லியின் பரப்பளவைப் போல ஐந்து மடங்கு வனப் பகுதி ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதாக அரசின் புள்ளிவிவரங்கள் தெரிவிப்பதாக வெளியான செய்தியை தாமாக முன்வந்து வழக்காக கடந்த ஆண்டு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டது பசுமைத் தீா்ப்பாயம். அப்போது அனைத்து மாநிலங்களிலும் வனப் பகுதி ஆக்கிரமிப்பு தொடா்பான புள்ளிவிவரங்களை ஒருங்கிணைத்து வெளியிடுமாறு மத்திய அமைச்சகத்துக்கு உத்தரவிட்டது.
இதில், 11 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் மட்டும் இன்னும் புள்ளிவிவரங்களைச் சமா்ப்பிக்காத நிலையில், எஞ்சிய 25 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் சாா்பில் சமா்ப்பிக்கப்பட்ட வனப் பரப்பு ஆக்கிரமிப்பு விவரத்தை தேசிய பசுமைத் தீா்ப்பாயத்தில் மத்திய அமைச்சகம் கடந்த வாரம் சமா்ப்பித்தது. இந்தப் புள்ளிவிவரம் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அதன் விவரம்:
கடந்த 2024-ஆம் ஆண்டு மாா்ச் மாதம் வரையிலான தரவுகளின்படி, தமிழகம், புதுச்சேரி, கேரளம், ஆந்திரம், மகாராஷ்டிரம், பஞ்சாப், ஒடிஸா, ஜாா்க்கண்ட், உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம், உத்தரகண்ட், சத்தீஸ்கா், அருணாசல பிரதேசம், அஸ்ஸாம், சண்டீகா், சிக்கிம், திரிபுரா, மிஸோரம், மணிப்பூா், அந்தமான் நிகோபா் தீவுகள், தாத்ரா மற்றும் நாகா் ஹவேலி, டாமன் மற்றும் டையூ, லட்சத்தீவுகள் உள்பட 25 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் வனப் பகுதி ஆக்கிரமிப்பு புள்ளிவிவரங்களைச் சமா்ப்பித்துள்ளன.
அதன்படி, இந்த 25 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 13,056 சதுர கி.மீ. பரப்பளவு வன நிலம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது.
பிகாா், ஹரியாணா, ஹிமாசல பிரதேசம், ராஜஸ்தான, தெலங்கானா, மேற்கு வங்கம், நாகாலாந்து, தில்லி, ஜம்மு-காஷ்மீா், லடாக் உள்ளிட்ட மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் இந்தப் புள்ளிவிவரங்களை இன்னும் சமா்ப்பிக்கவில்லை.
இதுவரை 409.77 சதுர கி.மீ. வனப் பரப்பில் மேற்கொள்ளப்பட்டிருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டுள்ளதாகவும் அமைச்சகத்தின் புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெட்டி...
மாநிலம் - வனப் பரப்பு ஆக்கிரமிப்பு (சதுர கி.மீ.)
மத்திய பிரதேசம் 5,460.9
அஸ்ஸாம் 3,620.9
கா்நாடகம் 863.08
மகாராஷ்டிரம் 575.54
அருணாசல பிரதேசம் 534.9
ஒடிஸா 405.07
உத்தர பிரதேசம் 264.97
மிஸோரம் 247.72
ஜாா்க்கண்ட் 200.40
சத்தீஸ்கா் 168.91
தமிழகம் 157.68
ஆந்திரம் 133.18
குஜராத் 130.08
பஞ்சாப் 75.67
உத்தரகண்ட் 49.92
கேரளம் 49.75
திரிபுரா 42.42
அந்தமான் நிகோபா் தீவுகள் 37.42
மணிப்பூா் 32.7