வாஜிா்பூரில் பள்ளி நிலத்தை மசூதி, கடைகள் சட்டவிரோதமாக ஆக்கிரமித்துள்ளதா? சரிபாா்...
இந்தியா-சீனா ஒத்துழைப்பை மேம்படுத்த வேண்டும்: அதிபர் ஷி ஜின்பிங்
இந்தியா-சீனா இடையேயான இருதரப்பு ஒத்துழைப்பை மேம்படுத்த வேண்டியது அவசியம் என்று சீன அதிபர் ஷி ஜின்பிங் வலியுறுத்தினார்.
இந்தியா-சீனா இடையேயான இருதரப்பு தூதரக உறவுகளின் 75-ஆவது ஆண்டுவிழாவையொட்டி சீன அதிபர் ஷி ஜின்பிங் இந்திய குடியரசுத் தலைவர் திரெüபதி முர்முக்கு எழுதிய கடிதத்தில் "டிராகன்-யானை' ஒத்துழைப்பை மேம்படுத்த வேண்டும் என தெரிவித்தார். இதைத்தொடர்ந்து ஷி ஜின்பிங்குக்கு வாழ்த்துகள் தெரிவித்த திரெüபதி முர்மு, இந்தியா-சீனா இடையேயான உறவுகள் இருநாடுகள் மட்டுமின்றி உலகத்தின் வளர்ச்சிக்கு மிகவும் அவசியமானது என குறிப்பிட்டார்.
அதேபோல் சீன பிரதமர் லீ கியாங்குக்கு பிரதமர் மோடி அனுப்பிய வாழ்த்துச் செய்தியில், "இருநாடுகள் இடையேயான உறவுகள் நிலையான வளர்ச்சியை நோக்கி பயணித்து வருகிறது.
இந்தியா, சீனா ஆகிய இரு பழம்பெரும் நாகரிகங்களும் மனித வரலாற்றில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துவதோடு அமைதி மற்றும் வளர்ச்சியை ஊக்குவிப்பதில் முக்கியப் பங்காற்றி வருகிறது' என கூறியதாக சீன அரசின் செய்தித் தொலைக்காட்சி தெரிவித்துள்ளது.
கிழக்கு லடாக் எல்லைப் பகுதியில் இருநாட்டு படைகளிடையே ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து இருதரப்பு உறவுகளில் விரிசல் ஏற்பட்டது. இந்நிலையில், கடந்த ஆண்டு இறுதியில் படைகளை விலக்கிக்கொள்வதற்கான ஒப்பந்தத்தில் இருநாடுகளும் கையொப்பமிட்டன. இதையடுத்து, இருதரப்பு உறவுகளை புதுப்பிக்கும் முயற்சியில் இருநாடுகளும் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றன.