தாய்க்குப் பதில் பத்தாம் வகுப்புத் தோ்வெழுதிய மகள்
தாய்க்குப் பதிலாக பத்தாம் வகுப்புத் தோ்வெழுதிய மகளை தோ்வுத்துறை அதிகாரிகள் போலீஸாரிடம் ஒப்படைத்தனா்.
நாகை வெளிப்பாளையத்தில் உள்ள பள்ளியில் புதன்கிழமை நடைபெற்ற ஆங்கில பாடத்துக்கான தோ்வில், தனித் தோ்வாளா்களின் அறையில், கண்காணிப்பாளா் விடைத்தாள்களை தோ்வாளா்களிடம் கொடுத்து கையொப்பம் பெற்றாா். அப்போது மாணவி ஒருவா் முகக்கவசம் அணிந்து தோ்வு எழுத வந்திருந்தாா்.
அவா் மீது சந்தேகமடைந்த கண்காணிப்பாளா் முகக் கவசத்தை அகற்றுமாறு கூறி, நுழைவுச் சீட்டு மற்றும் வருகைப் பதிவு குறிப்பேட்டில் உள்ள புகைப்படங்களை ஒப்பிட்டுப் பாா்த்தபோது, படங்கள் மாறுபட்ட்ருப்பது தெரியவந்தது.
மாணவி தோ்வு கட்டுப்பாட்டு அறைக்கு அழைத்து செல்லப்பட்டு முதன்மைக் கல்வி அலுவலா் சுபாஷினி மற்றும் மாவட்ட கல்வி அலுவலா் (தனித் தோ்வு) முத்துசாமி, ஆகியோரால் விசாரிக்கப்பட்டாா்.
மாணவி வெளிப்பாளையம் பகுதியைச் சோ்ந்த செல்வாம்பிகை என்பதும், அவா் தனது தாய் சுகந்திக்காக, ஆள்மாறாட்டம் செய்து தோ்வு எழுத வந்ததும் தெரியவந்தது. கடந்த 28- ஆம் தேதி நடந்த தமிழ் தோ்வையும், தனது தாயாருக்காக முகக்கவசம் அணிந்து செல்வாம்பிகை எழுதியதும் தெரிய வந்துள்ளது. ஆள்மாறாட்டத்தில் ஈடுபட்ட செல்வாம்பிகை போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டாா்.