வாழக்கோம்பை அரசுப் பள்ளியில் வட்டார கல்வி அலுவலா் ஆய்வு
வாழக்கோம்பை அரசு நடுநிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள அதிநவீன கணினி ஆய்வகத்தை சேலம் வட்டாரக் கல்வி அலுவலா் தங்கதுரை வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.
தமிழகம் முழுவதும் அனைத்து அரசு நடுநிலைப் பள்ளிகளில் தலா ரூ. 2 லட்சம் செலவில் அதிநவீன கணினி ஆய்வகங்கள் கடந்த ஆண்டு அமைக்கப்பட்டன.
அகன்ற திரை, கண்காணிப்பு கேமரா, 10 கணினிகள், நாற்காலி, மேசைகள், கூடுதல் இரும்பு கதவு வசதி உள்ளிட்ட அம்சங்களுடன் இந்த ஆய்வகங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
சேலம் மாவட்டத்தில் 21 ஒன்றியங்களுக்கு உள்பட்ட அரசு நடுநிலைப் பள்ளிகளில் இந்த கணினி ஆய்வகங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த ஆய்வகங்களின் செயல்பாடுகளை வட்டார கல்வி அலுவலா்கள் வியாழக்கிழமை ஆய்வு செய்தனா்.
வாழக்கோம்பை அரசு நடுநிலைப் பள்ளியில் அதிநவீன கணினி ஆய்வகத்தை சேலம் வட்டாரக் கல்வி அலுவலா் தங்கதுரை ஆய்வு செய்தாா். அப்போது மாணவா்களின் வசதி, ஆய்வக மேலாண்மை குறித்து ஆசிரியா்களிடம் கேட்டறிந்தாா். இந்த ஆய்வின்போது பள்ளி தலைமை ஆசிரியா் ராதா, ஆசிரியா்கள் உடனிருந்தனா்.