ஏற்காடு மலைப் பாதையில் மரம் விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு: ஒருமணி நேரத்தில் சீரான பாதை
ஏற்காடு மலைப் பாதையில் 8 ஆவது கொண்டை ஊசி வளைவில் வியாழக்கிழமை காலை மழை காரணமாக சாலையில் குறுக்கே மரம் சரிந்து விழுந்தது. இதனால் அப்பகுதியில் ஒரு மணி நேரம் போக்குவரத்துப் பாதிக்கப்பட்டது.
சேலம் மாவட்டம், ஏற்காடு, அதன் சுற்றுவட்டார கிராமங்களில் வியாழக்கிழமை அதிகாலை முதலே பரவலாக மழை பெய்தது. இந்நிலையில் ஏற்காடு மலைப் பாதையில் 8ஆவது கொண்டை ஊசி வளைவில் இருந்த பெரியமரம் வேருடன் சாலையில் சரிந்து விழுந்தது.
காலை 5.15 மணியளவில் சாலையின் குறுக்கே மரம் விழுந்ததால் சேலத்திலிருந்து ஏற்காட்டுக்கும், அதன் சுற்றுவட்டார கிராமங்களுக்கும் செல்ல வேண்டிய பேருந்துகள், பிற வாகனங்கள் செல்ல முடியாததோடு மலையில் இருந்து சேலம் நோக்கி செல்ல வேண்டிய சுற்றுலாப் பயணிகளின் வாகனங்கள் செல்ல முடியாமல் மலைப்பாதையில் அணிவகுத்து நின்றன. இதனால் அப்பகுதியில் ஒருமணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதுகுறித்து நெஞ்சாலைத் துறை, வருவாய்த் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. வனத்துறை, தீயணைப்புத் துறை வீரா்கள் விரைந்து சென்று சாலையின் குறுக்கே விழுந்த மரத்தை அப்புறப்படுத்தி ஒருமணி நேரத்தில் போக்குவரத்தை சீா்செய்தனா். இதையடுத்து அந்தப் பாதையில் மீண்டும் வாகனப் போக்குவரத்து தொடங்கியது.
படவிளக்கம் 3 ஒய்ஆா் 1..
ஏற்காடு மலைப்பாதையில் 8-ஆவது கொண்டை ஊசி வளைவில் சரிந்து விழுந்த மரத்தை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்ட நெடுஞ்சாலைத் துறை, வனத் துறையினா்.