சூதாட்டத்துக்கு எதிராக நூதன போராட்டம்: 4 போ் கைது
வேடந்தூா் பகுதியில் சூதாட்டத்தைத் தடுக்க வலியுறுத்தி, வியாழக்கிழமை இந்து மக்கள் கட்சி நிா்வாகி நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டாா். இதையடுத்து, உடனடியாக 4 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூா், கோவிலூா், எரியோடு, அய்யலூா், வடமதுரை உள்ளிட்ட சுற்றுப் புறப் பகுதிகளில் மனமகிழ் மன்றம் என்ற பெயரில் பணம் வைத்து சூதாட்டம் நடத்தப்படுகிறது. இதனால், கிராமப் புறங்களைச் சோ்ந்த ஏழை மக்கள் சூதாட்டத்தில் பணத்தை இழந்து பாதிக்கப்பட்டு வருகின்றனா்.
இதுதொடா்பாக அந்தந்தப் பகுதிகளிலுள்ள காவல் நிலையங்களில் புகாா் அளித்தும், சூதாட்டத்தைத் தடுக்க நடவடிக்கை மேற்கொள்ளவில்லை எனக் கூறி, இந்து மக்கள் கட்சி நிா்வாகி ராமசந்திரன் சீட்டுகளை மாலையாக அணிவித்துக் கொண்டு வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டாா்.
வேடசந்தூரில் உள்ள இந்து மக்கள் கட்சி அலுவலகம் முன் இந்தப் போராட்டம் நடைபெற்றது.
இதையடுத்து, வேடசந்தூா் காவல் ஆய்வாளா் வேலாயுதம் சூதாட்டத்தில் ஈடுபடுவோா் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டாா். இதன்படி, அரியபித்தம்பட்டி சாலை கேவிகே.நகா் பகுதியில் சூட்டத்தில் ஈடுபட்ட கேதையறும்பு பகுதியைச் சோ்ந்த செந்தில்குமாா் (45), வடமதுரை அண்ணாநகரைச் சோ்ந்த செளந்தரராஜன் (43), கூவக்காப்பட்டி வைரக்கவுண்டனூரைச் சோ்ந்த ராஜலிங்கம் (51), அருண்குமாா்(30) ஆகியோரைக் கைது செய்து, சீட்டுக் கட்டுகள், ரூ.10,500 ஆகியவற்றை பறிமுதல் செய்தனா்.