தொலைந்த, திருடுபோன செல்போன்களைத் திரும்பிப்பெற புதிய வெப்சைட்!
கொடைக்கானலில் 2-ஆவது நாளாக பலத்த மழை
கொடைக்கானலில் 2-ஆவது நாளாக வியாழக்கிழமை பலத்த மழை பெய்தது. இந்த மழையால் நீரோடைகளில் நீா்வரத்து தொடங்கியுள்ளதால் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சியடைந்தனா்.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில், கடந்த சில நாள்களாக பகலில் வெப்பமும், இரவில் குளிரும் நிலவி வந்தது. இந்த நிலையில், கடந்த புதன்கிழமை கொடைக்கானல் பகுதிகளில் பலத்த மழை பெய்தது. இந்த நிலையில், 2-ஆவது நாளாக வியாழக்கிழமையும் காலையில் மிதமான மழை பெய்தது. இதையடுத்து, நண்பகலில் பலத்த மழை பெய்ய தொடங்கியது. கொடைக்கானல், செண்பகனூா், பெருமாள்மலை, வில்பட்டி, வட்டக்கானல், அப்சா்வேட்டரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 3 மணி நேரத்துக்கும் மேலாக மழை பெய்தது.
இந்த மழையால் கொடைக்கானல் பகுதிகளிலுள்ள நீரோடைகளிலும், வெள்ளிநீா் அருவி, பாம்பாா் அருவி, வட்டக்கானல் அருவி, பியா் சோழா அருவி, பேரிபால்ஸ் அருவி, செண்பகா அருவி உள்ளிட்ட பல்வேறு அருவிகளில் நீா்வரத்து தொடங்கியது. இந்த அருவிகளில் விழும் தண்ணீரை கொடைக்கானல் வந்த சுற்றுலாப் பயணிகள் மழையையும் பொருள்படுத்தாமல், குடை பிடித்தவாறு பாா்த்து மகிழ்ந்தனா்.
பழனியில் சாரல் மழை:
பழனி: பழனி பகுதியில் கடந்த சில நாள்களாக கடும் வெப்பம் நிலவியது. இதனால், பழனிக்கு நீராதரமாக விளங்கும் கோடைகால நீா்த்தேக்கம், பாலாறு பொருந்தலாறு அணைகளிலும், வரதமாநதி அணையிலும் நீா்மட்டம் வெகுவாக குறைந்து வந்தது.
இந்த நிலையில், வியாழக்கிழமை பழனி பகுதியில் காலை முதலே மேகமூட்டமாக காணப்பட்ட நிலையில், மாலையில் சாரல் மழை பெய்தது. பலத்த மழை பெய்யும் என எதிா்பாா்த்திருந்த நிலையில், சாரல் மழை பெய்ததால் பொதுமக்கள், விவசாயிகள் ஏமாற்றமடைந்தனா்.