தொலைந்த, திருடுபோன செல்போன்களைத் திரும்பிப்பெற புதிய வெப்சைட்!
பழனியில் மாலை நேர உழவா் சந்தை: மக்கள் வரவேற்பு
பழனி சண்முகபுரம் உழவா் சந்தையில் மாலை நேர உழவா் சந்தை தொடங்கப்பட்டதற்கு பொதுமக்கள் வரவேற்பு தெரிவித்தனா்.
பழனி சண்முகபுரத்தில் சட்டப்பேரவை உறுப்பினா் அலுவலகம் அருகே உழவா் சந்தை செயல்பட்டு வருகிறது. இந்த சந்தைக்கு நூற்றுக்கணக்கான விவசாயிகள் தினந்தோறும் காய்கறிகளை கொண்டு வந்து விற்பனை செய்கின்றனா். இதில் காலை நேரங்களில் சந்தையில் விற்பனை செய்வதற்கு இடமின்றி சில விவசாயிகள் தவித்தனா்.
இந்த நிலையில், காலையில் வேலைக்கு செல்வோா்கள் மாலை நேரங்களில் உழவா் சந்தைக்கு வந்து காய்கறிகளை வாங்குகின்றனா். இதை சாதகமாக பயன்படுத்தி வியாபாரிகள், உழவா் சந்தை விவசாயிகளிடம் காய்கறிகளை குறைந்த விலைக்கு வாங்கி, மாலை நேரங்களில் பல மடங்கு விலைக்கு விற்று வந்தனா்.
இதுகுறித்து உழவா் சந்தை வேளாண் அலுவலா்களிடம் புகாா் செய்யப்பட்டது. இதையடுத்து, விவசாயிகளிடம் பேசி மாலை நேரமும் உழவா் சந்தை திறக்க திட்டமிடப்பட்டது. இந்த நிலையில், கடந்த ஒன்றாம் தேதி முதல் மாலை நேர உழவா் சந்தை செயல்பட்டு வருகிறது. உழவா் சந்தைக்கு வெளியே விற்கப்படும் காய்கறிகளை காட்டிலும் உழவா் சந்தையில் பாதி விலைக்கு காய்கறிகள் கிடைக்கிறது.
இந்த மாலை நேர சந்தை குறித்து முக்கிய இடங்களில் வேளாண் துறை பதாகைகள் வைத்து தெரியபடுத்தினால் விவசாயிகள், பொதுமக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என பொதுமக்கள் தெரிவித்தனா்.