உ.பி. அரசுப் பள்ளிகளில் தமிழ்: முதல்வர் ஆதித்யநாத் தகவல்
உத்தர பிரதேச அரசுப் பள்ளிகளில் மாணவர்களுக்கு தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், வங்காளம், மராத்தி ஆகிய மொழிகள் பயிற்றுவிக்கப்படுவதாக அந்த மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் பிடிஐ செய்தியாளருக்கு அளித்த பேட்டி:
உத்தர பிரதேசம் வளர்ச்சியில் எழுச்சி பெற்றுள்ளது. இந்த மாநிலம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கி வருகிறது. மொழியை வைத்து அரசியல் செய்யும் தலைவர்களைக் கொண்டுள்ள மாநிலங்கள் வளர்ச்சியில் சரிவைச் சந்தித்து வருகின்றன.
பல்வேறு மொழிகளை கற்றுக்கொள்வது எந்த மாநிலத்தின் முக்கியத்துவத்தையும் குறைத்து விடாது. உத்தர பிரதேச அரசுப் பள்ளிகளில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், வங்காளம், மராத்தி ஆகிய மொழிகள் மாணவர்களுக்கு பயிற்றுவிக்கப்படுகின்றன. இதனால் உத்தர பிரதேசத்தின் மகத்துவம் குறைந்ததா?
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், வங்காளம் அல்லது மராத்தி போன்ற மொழிகள் தேசிய ஒருமைப்பாட்டின் மையமாக உருவெடுக்க முடியும்.
உத்தர பிரதேசத்தில் மிகப்பெரிய அளவில் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டு வருகின்றன. மொழியை வைத்து நடத்தப்படும் குறுகிய அரசியலால் இளைஞர்களுக்கான வாய்ப்புகளுக்கு பாதிப்பு ஏற்படும்.
சில மாநிலங்களில் மொழியை வைத்து தலைவர்கள் அரசியல் செய்கின்றனர். அந்த மாநிலங்கள் வளர்ச்சியில் சரிவைச் சந்திப்பதற்கு இதுவே காரணம். அவர்களுக்கு அரசியல் செய்ய வேறு காரணங்கள் இல்லை. இதனால் தங்களது அரசியல் ஆதாயத்துக்காக உணர்ச்சிகளைத் தூண்டிவிட்டு அரசியல் செய்கின்றனர்.
ஹிந்தி மொழி மதிக்கப்பட வேண்டும் என்று அனைவரும் நம்புகின்றனர். எனினும் மும்மொழிக் கொள்கையை இந்தியா ஏற்றுக் கொண்டுள்ளது.
பிராந்திய மொழிகளும் அதே மரியாதையைப் பெறுவதை மும்மொழிக் கொள்கை உறுதி செய்கிறது. ஒவ்வொரு மொழிக்கும் தனித்தன்மை உள்ளது.
ஒவ்வொரு மொழிக்கும் நாட்டுப்புற பாரம்பரியம் உள்ளது. அவை நாட்டின் பன்முகத்தன்மையை வலுப்படுத்துகின்றன. இதற்கு சிறந்த உதாரணமாக காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியைக் கூறலாம். இந்த நிகழ்ச்சி இந்தியாவின் தொன்மையான மொழிகளான தமிழையும் சமஸ்கிருதத்தையும் இணைக்கிறது என்றார் அவர்.