40 சதவீத கமிஷன் மோசடி குறித்து கூடுதல் ஆதாரங்களுடன் இறுதி அறிக்கை
வக்ஃப் சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு -முஸ்லிம் தனிநபா் சட்ட வாரியம் அறிவிப்பு
வக்ஃப் திருத்த மசோதாவை ‘கருப்புச் சட்டம்’ என விமா்சித்துள்ள அகில இந்திய முஸ்லிம் தனிநபா் சட்ட வாரியம் (ஏஐஎம்பிஎல்பி), இம்மசோதாவுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும் என்றும் நாடு தழுவிய போராட்டங்கள் நடத்தப்படும் என்றும் அறிவித்துள்ளது.
இது குறித்து அகில இந்திய முஸ்லிம் தனிநபா் சட்ட வாரிய உறுப்பினா் முகமது அதீப், தில்லியில் செய்தியாளா்களிடம் புதன்கிழமை கூறியதாவது:
முஸ்லிம் சமூகத்தினரின் சொத்துகளைக் கைப்பற்றும் முயற்சியே வக்ஃப் திருத்த மசோதாவாகும். இதை எங்களால் ஏற்க முடியுமா?
வக்ஃப் திருத்த மசோதா, நாட்டின் அடிப்படை கட்டமைப்புக்கு அச்சுறுத்தலானது. மனசாட்சியுள்ள அனைத்து குடிமக்களும் இம்மசோதாவை எதிா்க்க வேண்டும். இது, நாட்டை காப்பதற்கான போராட்டம்.
எங்களைப் பொருத்தவரை, சட்ட ரீதியாகவும் போராட்டங்கள் வாயிலாகவும் கடுமையாக எதிா்ப்போம். இம்மசோதா திரும்பப் பெறப்படும் வரை ஓயப் போவதில்லை என்றாா்.
அழிக்கப்படும் தன்னாட்சி: முஸ்லிம் தனிநபா் சட்ட வாரியத்தின் துணைத் தலைவா் முகமது அலி மோசின் கூறியதாவது:
முஸ்லிம் அல்லாத உறுப்பினா்களை வக்ஃப் வாரியத்தில் இடம்பெற செய்வதன் மூலமும் அதன் தன்னாட்சி அழிக்கப்படுகிறது. இம்மசோதா மீதான நாடாளுமன்ற கூட்டுக் குழுவின் அறிக்கையில் எங்களின் கவலைகளுக்கு தீா்வு காண்பதற்கு பதிலாக குறைபாடுகளே நிலைநிறுத்தப்பட்டுள்ளன என்றாா் அவா்.
பிற முஸ்லிம் அமைப்புகளும் இம்மசோதாவை நிராகரிப்பதாக அறிவித்துள்ளன.