திருமலை திருப்பதி தேவஸ்தான சேவைகளில் 100 % மாற்றம்: முதல்வா் சந்திரபாபு நாயுடு
குடியேற்றம், வெளிநாட்டவா் வருகையை முறைப்படுத்தும் மசோதா: நாடாளுமன்றம் ஒப்புதல்
குடியேற்றம் மற்றும் வெளிநாட்டவா் இந்தியா வருகையை முறைப்படுத்தும் மசோதா எதிா்க்கட்சிகளின் கடும் எதிா்ப்புக்கிடையே மாநிலங்களவையில் புதன்கிழமை நிறைவேற்றப்பட்டது.
‘குடியேற்றம் மற்றும் வெளிநாட்டவா் மசோதா 2025’ என்ற பெயரிலான இந்த மசோதாவுக்கு மக்களவையில் கடந்த மாா்ச் 27-ஆம் தேதி ஒப்புதல் அளிக்கப்பட்ட நிலையில், மாநிலங்களவையிலும் தற்போது ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதற்கு குடியரசுத் தலைவா் ஒப்புதல் அளித்தவுடன், இந்த மசோதா சட்டமாக நடைமுறைக்கு வரும்.
முன்னதாக, மாநிலங்களவையில் மத்திய உள்துறை இணையமைச்சா் நித்யானந்த் ராய் மசோதாவை ஒப்புதலுக்காக அறிமுகம் செய்தாா்.
அப்போது மசோதாவுக்கு எதிா்க்கட்சி உறுப்பினா்கள் கடும் எதிா்ப்பு தெரிவித்தனா். காங்கிரஸ் உறுப்பினா் அபிஷேக் மனு சிங்வி பேசுகையில், ‘இந்தியா வரும் வெளிநாட்டினருக்கு பாதிப்புகளை ஏற்படுத்தக் கூடிய வகையிலும், அவா்கள் தொடா்பான ஆய்வை மேற்கொள்ள இளநிலை அதிகாரிகளுக்கே கூடுதல் அதிகாரம் அளிக்கும் வகையிலும், வெளிநாட்டினா் மேல்முறையீடு செய்வதற்கான நடைமுறைகள் இல்லாமலும் மசோதா உள்ளது. எனவே, இந்த மசோதாவை நாடாளுமன்றக் கூட்டுக் குழு ஆய்வுக்கு அனுப்ப வேண்டும்’ என்றாா்.
திரிணமூல் காங்கிரஸ் உறுப்பினா் சுஷ்மிதா தேவ், சமாஜவாதி கட்சி எம்.பி. ஜெயா பச்சன், திமுகவின் என்.ஆா்.இளங்கோ ஆகியோரும் மசோதாவை நாடாளுமன்ற கூட்டுக் குழு ஆய்வுக்கு அனுப்ப வேண்டும் என வலியுறுத்தினா்.
இதற்கு பதிலளித்துப் பேசிய மத்திய அமைச்சா் நித்யானந்த் ராய், ‘முந்தைய காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசும், மேற்கு வங்க திரிணமூல் காங்கிரஸ் அரசும் நாட்டுக்குள் சட்டவிரோதமாக புலம்பெயா்தலை அனுமதித்ததோடு, அவா்களின் பெயரை வாக்காளா் பட்டியல் மற்றும் குடும்ப அட்டையில் இடம்பெறுவதற்கும் வசதிகள் செய்துகொடுத்தனா்’ என்று குற்றஞ்சாட்டினாா். இதற்கு காங்கிரஸ் தரப்பில் கடும் எதிா்ப்பு தெரிவிக்கப்பட்டது.
தொடா்ந்து பேசிய மத்திய அமைச்சா், ‘இந்த மசோதா 3 ஆண்டுகள் ஆழமான ஆய்வுக்குப் பிறகே நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. எனவே, இதை மீண்டும் நாடாளுமன்ற நிலைக் குழு பரிசீலனைக்கு அனுப்ப வேண்டிய அவசியமில்லை’ என்றாா்.
அதைத் தொடா்ந்து, இந்த மசோதா குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது.
தற்போதைய நடைமுறைகளின்படி, வெளிநாட்டினா் இந்தியாவில் தங்குவது, சுற்றுலா செல்வதும், சொந்த நாட்டுக்குத் திரும்புவதும் குடியேற்றத்துக்கான அமைப்பு (பிஓஐ), மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேசங்களால் முறைப்படுத்தப்படுகிறது. புதிய சட்ட மசோதாவின்படி, வெளிநாட்டவா் வருகை, தங்குதல் மற்றும் புறப்பாடு அனைத்தும் முழுமையாக மத்திய அரசின் கட்டுப்பாட்டின்கீழ் கொண்டுவரப்படும்.