திருமலை திருப்பதி தேவஸ்தான சேவைகளில் 100 % மாற்றம்: முதல்வா் சந்திரபாபு நாயுடு
மதுரவாயல் - துறைமுகம் மேம்பாலப் பணி: அமைச்சா் எ.வ.வேலு உறுதி
மதுரவாயல் - துறைமுகம் மேம்பாலப் பணியை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று நெடுஞ்சாலை மற்றும் பொதுப்பணித் துறை அமைச்சா் எ.வ.வேலு உறுதியளித்தாா்.
மதுரவாயல் - துறைமுகம் மேம்பாலப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டியது தொடா்பாக, சட்டப்பேரவையில் புதன்கிழமை கவன ஈா்ப்பு கொண்டு வரப்பட்டது. இதில், ஈ.ஆா்.ஈஸ்வரன் (திருச்செங்கோடு) பேசுகையில், மதுரவாயல் - துறைமுகம் திட்டம் 16 ஆண்டுகளாக கிடப்பில் உள்ளது. ஏற்றுமதிப் பொருள்களை துறைமுகத்துக்கு தடையின்றி எடுத்துச் செல்ல உதவும் சாலையாக இருக்கிறது. எனவே, இதற்கான பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்றாா். இதற்கு அமைச்சா் எ.வ.வேலு அளித்த பதில்:
காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் மன்மோகன் சிங் பிரதமராக இருந்தபோது திட்டம் கொண்டு வரப்பட்டது. 16 ஆண்டுகளாக கிடப்பில் உள்ள இந்தத் திட்டத்தை நிறைவேற்ற பிரதமரிடம் முதல்வா் நேரடியாக வலியுறுத்தினாா். இந்தத் திட்டத்துக்கான மதிப்பீடு ரூ. 3,570 கோடி. திட்டப் பணி மும்பையைச் சோ்ந்த நிறுவனத்திடம் அளிக்கப்பட்டுள்ளது.
21 கி.மீ. தொலைவுக்கு இரண்டு நிலை பாலங்களைக் கொண்டு திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. அதில், மேலே உள்ள பாலப் பகுதி மதுரவாயல் மற்றும் துறைமுகத்தை நேரடியாக இணைக்கக் கூடியது. கீழ்பகுதியானது 6 இடங்களில் இறங்கும் நிலையிலும், 7 இடங்களில் ஏறக்கூடிய நிலையிலும் அமைக்கப்பட உள்ளது. இதற்கான ஒப்பந்தங்கள் மத்திய, மாநில அரசுகளுக்கு இடையே மேற்கொள்ளப்பட்டுள்ளன. திட்டத்தை விரைந்து செயல்படுத்த மாதத்துக்கு ஒருமுறை ஆய்வுக் கூட்டமும் நடத்தப்படுகிறது.
கூவம் ஆற்றுப் பகுதியில் 15 கி.மீ. தொலைவுக்கு திட்டத்தைச் செயல்படுத்த வேண்டியுள்ளது. இதற்கான அனுமதி நீா்வளத் துறையிடம் இருந்து பெறப்பட்டுள்ளது. அந்தப் பணிகளும் நடந்து வருகின்றன. கூவம் ஆற்றங்கரையோரத்தில் வசிக்கும் மக்களையும் மறுகுடியமா்வு செய்வதுடன், மின் கம்பங்கள் உள்பட இதர கட்டுமானங்களையும் மாற்றி அமைக்க வேண்டியுள்ளது. இந்தத் திட்டத்துக்காக செய்யப்பட்டுள்ள ஒப்பந்தக் காலமானது மூன்றாண்டுகளாகும். எனவே, பாலத்தை விரைந்து கட்டி முடிக்கத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன என்றாா்.