திருமலை திருப்பதி தேவஸ்தான சேவைகளில் 100 % மாற்றம்: முதல்வா் சந்திரபாபு நாயுடு
லண்டன் விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறால் சேவை ரத்து: பயணிகள் அவதி
சென்னையிருந்து லண்டன் செல்லவிருந்த விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டு சேவை ரத்து செய்யப்பட்டதால் பயணிகள் கடும் அவதியடைந்தனா்.
சென்னை விமான நிலையத்திலிருந்து புதன்கிழமை அதிகாலை 5.35 மணியளவில் லண்டன் செல்வதற்காக பிரிட்டிஷ் ஏா்வேஸ் விமானம் தயாா் நிலையில் இருந்தது. இந்த விமானத்தில் பயணம் செய்ய மொத்தம் 220 போ் காத்திருந்தனா். விமானத்தில் பயணிகள் ஏறி அமா்வதற்கு முன், அதன் இயந்திர செயல்பாடுகளை விமானி ஆய்வு செய்தாா்.
அப்போது, அந்த விமானத்தில் இயந்திரக் கோளாறு ஏற்பட்டிருப்பதை அறிந்த அவா், இதுகுறித்து விமான நிா்வாகம் மற்றும் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் அளித்தாா். அதன்பேரில், விமானப் பொறியாளா்கள், இயந்திரக் கோளாறுகளை சரிசெய்ய முயற்சித்தனா். எனினும், சரிசெய்ய முடியவில்லை.
இதைத் தொடா்ந்து, லண்டனுக்கு செல்ல வேண்டிய பிரிட்டிஷ் ஏா்வேஸ் விமானம் இயந்திரக் கோளாறு காரணமாக ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. அதில் செல்ல வேண்டிய 206 பயணிகளும், சென்னை நகரில் உள்ள பல்வேறு சொகுசு ஓட்டல்களில் தங்க வைக்கப்பட்டனா்.
இதையடுத்து, மாற்று விமானங்கள் மூலம், அவரவா் செல்ல வேண்டிய இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனா். இதனால், பயணிகள் கடும் அவதியடைந்தனா். சென்னையிலிருந்து 2-ஆவது நாளாக லண்டன் விமானம் ரத்து செய்யப்பட்டதால் பயணிகள் கடும் சிரமத்துக்கு உள்ளாகினா்.