எந்த அணிக்கும் இந்த நிலை வரலாம்; கேகேஆர் தோல்வி குறித்து ரமன்தீப் சிங்!
மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான போட்டியில் ஏற்பட்ட தோல்வி குறித்து கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் ரமன்தீப் சிங் பேசியுள்ளார்.
ஐபிஎல் தொடரில் மும்பை வான்கடே திடலில் நடைபெற்ற நேற்றையப் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் விளையாடின. இந்தப் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று, நடப்பு ஐபிஎல் தொடரில் தனது வெற்றிக் கணக்கைத் தொடங்கியது.
இதையும் படிக்க: திட்டங்களை தெளிவாக செயல்படுத்திய மும்பை இந்தியன்ஸ்; பாராட்டிய நியூசி. வீரர்!
மும்பை இந்தியன்ஸ் அணியில் அறிமுக வீரராக களமிறங்கிய அஸ்வனி குமார் அபாரமாக பந்துவீசி 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அறிமுகப் போட்டியில் அதிக விக்கெட்டுகளைக் கைப்பற்றிய முதல் இந்திய வீரர் என்ற சாதனையையும் அவர் படைத்தார். பேட்டிங்கில் அதிரடியாக விளையாடிய ரியான் ரிக்கல்டான் அரைசதம் விளாசி அசத்தினார். அவர் 41 பந்துகளில் 62 ரன்கள் எடுத்தார். 117 ரன்கள் என்ற எளிய இலக்கை மும்பை இந்தியன்ஸ் அணி 12.5 ஓவர்களில் எட்டி கொல்கத்தாவை வீழ்த்தியது.
ரமன்தீப் சிங் கூறியதென்ன?
மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்திய நிலையில், மும்பைக்கு எதிரான தோல்வி துரதிருஷ்டவசமானது எனவும், அடுத்து வரும் போட்டிகளில் ஒருபோதும் இவ்வாறு விளையாடமாட்டோம் எனவும் ரமன்தீப் சிங் கூறியுள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.
இதையும் படிக்க:மதிய உணவு உண்ணாமல் விளையாடிய அஸ்வனி குமார்..! பாண்டியாவின் அறிவுரையால் கிடைத்த விக்கெட்!
இது தொடர்பாக போட்டி நிறைவடைந்த பிறகு அவர் பேசியதாவது: ஆட்டத்தின் சூழல் எவ்வாறு இருந்தாலும், எந்த ஒரு அணியும் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தலாம். டாப் ஆர்டர் மற்றும் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சிறப்பாக செயல்படத் தவறும்போது, பின்வரிசை ஆட்டக்காரர்களுக்கு விளையாட வாய்ப்பு கிடைக்கும். ஆனால், மும்பைக்கு எதிரான போட்டி எங்களுக்கு துரதிருஷ்டவசமான போட்டியாக அமைந்துவிட்டது. இனிவரும் போட்டிகளில் இதுபோன்ற ஒரு சூழ்நிலையை கொல்கத்தா அணி மீண்டும் சந்திக்காமல் இருப்பதை உறுதி செய்வோம் என்றார்.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி அதன் அடுத்தப் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாதுக்கு எதிராக நாளை மறுநாள் (ஏப்ரல் 3) விளையாடவுள்ளது.