எம்புரான் சர்ச்சை: தமிழகத்திலும் வலுக்கும் எதிர்ப்பு!
மோகன்லால் நடிப்பில் உருவான எம்புரான் படத்திற்கு தமிழகத்திலும் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
மோகன்லால் - பிருத்விராஜ் கூட்டணியில் உருவான எம்புரான் திரைப்படம் மார்ச் 27 அன்று வெளியானது. லூசிபர் படத்தின் இரண்டாம் பாகமான இந்தப் படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.
படத்தில் குஜராத் மதக்கலவரம் பற்றிய காட்சிகள் இடம்பெற்றதைத் தொடர்ந்து வலதுசாரி அமைப்புகள் கண்டனம் தெரிவித்திருந்தனர்.
இதனால், மோகன்லால் வருத்தம் தெரிவித்த நிலையில் சர்ச்சைக்குரிய காட்சிகள் படத்திலிருந்து நீக்கப்பட்டன.
இந்த நிலையில், முல்லைப் பெரியாறு அணை பற்றி சர்ச்சைக்குரிய காட்சிகள் அமைக்கப்பட்டதால் படத்திற்கு தமிழகத்திலும் எதிர்ப்புகள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன.
இது தொடர்பாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், “மோகன்லால் நடிப்பில் உருவான ‘எம்புரான்’ திரைப்படத்தில் நெடும்பள்ளி என்கிற இடத்தில் உள்ள அணை கேரளாவை காவு வாங்கவிருப்பதாக வசனம் இடம்பெற்றுள்ளது. இதன்மூலம், கேரள மக்களுக்கு முல்லைப் பெரியாறு அணையால் ஆபத்து என்பதைப் போன்று திட்டமிட்டு வசனங்கள் திணிக்கப்பட்டிருப்பது கடும் கண்டனத்துக்குரியது" தெரிவித்துள்ளார்.
நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் வெளியிட்ட அறிக்கையில், “இந்திய அளவில் பல்வேறு மொழியில் வெளியாகியுள்ள எம்புரான் திரைப்படத்தில் முல்லைப்பெரியாறு அணையைப் பாதுகாப்பற்றது போல அவதூறாக சித்தரிப்பது வன்மையான கண்டனத்துக்குரியது.
மலையாள திரையுலக உச்ச நட்சத்திரங்களான மோகன்லால், பிரித்திவிராஜ் உள்ளிட்டவர்கள் நடித்துள்ள திரைப்படத்தில் அடிப்படை ஆதாரமற்ற பொய் பரப்புரை காட்சிகளை அமைத்து கேரள மக்களிடையே தேவையற்ற பயத்தையும், பீதியையும் ஏற்படுத்துவது மிகுந்த மன வருத்தத்தை அளிக்கிறது.
கேரள அரசின் மறைமுக ஆதரவுடன் மலையாளத் திரைத்துறை தொடர்ச்சியாக இத்தகைய பொய்ப்பரப்புரையில் ஈடுபட்டு வருவது இரு மாநில மக்களிடையே உள்ள நல்லிணக்கத்தைச் சீர்குலைப்பதற்கான சதிச்செயலேயாகும். இத்திரைப்படத்தில் மத ஒற்றுமை குறித்து பேசும் நீங்கள், இன வெறுப்பை விதைத்தது ஏன்?
ஆகவே, எம்புரான் திரைப்படக்குழு உடனடியாக முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பற்றதாக சித்தரிக்கும் அவதூறு பரப்புரைக் காட்சிகளை நீக்க வேண்டுமென வலியுறுத்துகிறேன்” குறிப்பிட்டுள்ளார்.