டிராவிஸ் ஹெட் ஆட்டமிழப்புக்கு கூச்சலிட்ட கொல்கத்தா..! 125 டெசிபலுக்கு ஒலித்த சப்...
தர்பூசணி வாங்கலாமா? கூடாதா? வெடித்தது சர்ச்சை
தர்பூசணி தொடர்பான சர்ச்சை இன்று பேசுபொருளாகியிருக்கிறது. ஒருபக்கம் உணவுத் துறை அதிகாரிகளின் தகவலால் தர்பூசணி விற்பனை குறைந்ததாக விவசாயிகளும் வியாபாரிகளும் போராட்டத்தில் ஈடுபட, ரசாயன தர்பூசணி குறித்து தாங்கள் எதுவும் சொல்லவில்லை என்று உணவுத் துறை அதிகாரிகள் விளக்கம் கொடுத்துள்ளனர்.
கோயம்பேடு மார்க்கெட்டில் இன்று, தர்பூசணி பழத்தை சாலையில் போட்டு உடைத்து அதனை சாப்பிட்டு வியாபாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதுபோல ரசாயனம் கலந்த தர்பூசணிகள் விற்பனைக்கு வருவதால் எச்சரிக்கையுடன் இருக்குமாறு உணவுத் துறை அதிகாரிகள் விழிப்புணர்வு விடியோ வெளியிட்டதால் விற்பனை குறைந்ததாகவும், விலை வீழ்ச்சியடைந்து நஷ்டம் ஏற்பட்டிருப்பதாகவும் விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில், ரசாயனம் கலந்த பழங்கள் குறித்து தாங்கள் எதுவும் கூறவில்லை என்றும், மக்கள் அச்சமின்றி தர்பூசணி பழங்களை வாங்கிச் சாப்பிடலாம் என்றும் உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரி சதீஷ் குமார் விளக்கம் கொடுத்துள்ளார்.
சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த சதீஷ் குமார், தர்பூசணியை சாப்பிட்டதால் வாயப்புண் வந்ததாகப் புகார் வந்ததால், பல்வேறு இடங்களில் சோதனை செய்தோம். ஆனால், இதுவரை எனது ஆய்வில், ரசாயனக் கலப்பு இருந்த தர்பூசணியை பார்க்கவில்லை. சென்னையில் அதுபோன்ற தர்பூசணி விற்கப்படவும் இல்லை.
உணவுப் பாதுகாப்புத் துறை இணையதளத்தில் ரசாயனம் கலந்த தர்பூசணி குறித்து விழிப்புணர்வு விடியோதான் வெளியிடப்பட்டுள்ளது. ஆனால், சென்னையில் இதுவரை ரசாயனம் கலந்த தர்பூசணி கண்டெடுக்கப்படவில்லை.
அதுபோல விவசாயிகளுக்கு எதிராக எதையும் செய்யவில்லை. மக்கள் அச்சமின்றி தர்பூசணி சாப்பிடலாம் என்று சதீஷ் குமார் விளக்கம் கொடுத்துள்ளார்.
அதுபோல, பல்வேறு இடங்களிலும் சோதனை செய்து கெட்டுப்போனது, எலி கடித்தவற்றைத்தான் கண்டுபிடித்து அழித்துள்ளோம் என்று விளக்கம் கொடுத்துள்ளார்.