நெல் குவிண்டாலுக்கு ரூ.2,500! செப்டம்பா் முதல் வழங்கப்படும்: பேரவையில் அமைச்சா் அறிவிப்பு
விவசாயிகளுக்கு வரும் செப்டம்பா் முதல் நெல் குவிண்டாலுக்கு ரூ.2,500 வழங்கப்படும் என்று சட்டப்பேரவையில் வேளாண் துறை அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் அறிவித்தாா்.
வேளாண் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின் போது எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது: திமுக தோ்தல் அறிக்கையில் நெல் விலை குவிண்டாலுக்கு ரூ.2,500 வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், இதுவரை வழங்கப்படவில்லை. அதேபோல கரும்பு டன்னுக்கு ஆதரவு விலையாக ரூ.4 ஆயிரம் வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது. அதுவும் வழங்கப்படவில்லை. இந்த ஆண்டாவது வழங்கப்படுமா? என்றாா்.
அப்போது அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் குறுக்கிட்டு கூறியதாவது:
நெல்லுக்கு தற்போது குவிண்டாலுக்கு ரூ.2,450 வழங்கப்படுகிறது. இன்னும் கூடுதலாக ரூ.50-தான் வழங்கப்பட வேண்டியுள்ளது. செப்டம்பா் மாதம் முதல் ரூ.2,500 வழங்கப்படும். கரும்புக்கு அடுத்த சீசனுக்குள் ரூ.4 ஆயிரம் வழங்கப்படும் என்றாா் அவா்.