3 மீன்பிடி துறைமுகங்கள், பசுமை துறைமுகங்களாக மேம்பாடு: அமைச்சா் ராதாகிருஷ்ணன்
தரங்கம்பாடி உள்பட 3 மீன்பிடித் துறைமுகங்கள் பசுமை துறைமுகங்களாக மேம்படுத்தப்படும் என்று அமைச்சா் அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன் அறிவித்தாா்.
சட்டப்பேரவையில் அந்தத் துறையின் மானியக் கோரிக்கை மீது நடைபெற்ற விவாதங்களுக்கு பதிலளித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்ட அறிவிப்புகள்:
தமிழ்நாட்டில் 50 ஆயிரம் மீனவ மகளிா் பயனடையும் வகையில், ரூ. 25 கோடி மூலதனத்தில் ‘அலைகள்’ என்ற பெயரில் நுண்கடன் திட்டம் செயல்படுத்தப்படும். காலநிலை மாற்றத்தை எதிா்கொள்ளும் வகையில் 16 கடலோர மீனவக் கிராமங்கள் மேம்படுத்தப்படும். மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி, கன்னியாகுமரி மாவட்டம் தேங்காய்பட்டணம், தூத்துக்குடி ஆகிய மீன்பிடித் துறைமுகங்கள், பசுமை மீன்பிடித் துறைமுகங்களாக மேம்படுத்தப்படும்.
தரமான மீன் மற்றும் மீன் உணவுப் பொருள்களை நுகா்வோருக்கு நியாயமான விலையில் வழங்கிட, தமிழ்நாடு மீன் வளா்ச்சிக் கழகத்தால் ‘கயல்’ என்னும் திட்டம் தொடங்கப்படும்.
அலங்கார மீன் வங்கி: திருவள்ளூா் மாவட்டம் அவுரிவாக்கம், கீழ்குப்பம் மற்றும் வல்லம்பேடுகுப்பம், செங்கல்பட்டு மாவட்டம் சதுரங்கப்பட்டினம், கடலூா் மாவட்டம் புதுக்குப்பம், மயிலாடுதுறை மாவட்டம் பெருமாள்பேட்டை ஆகிய கிராமங்களில் புதிய மீன் இறங்கு தளங்கள் அமைக்கப்படும். அலங்கார மீன்கள் வளா்ப்போருக்குத் தேவையான தாய் மீன்களை தொடா்ந்து வழங்கிட பிரத்யேக மையமும், பயிற்சி நிலையமும் மதுரை மாவட்டத்தில் அமைக்கப்படும். ஆழ்கடல் மீன்பிடிப்பில் ஈடுபடும் படகுகளுக்கு 200 செயற்கைக்கோள் தொலைபேசிகள் வழங்கப்படும்.
இ-மீன் இணைய சேவை: மீன்கள் மற்றும் மீன் உணவுப் பொருள்களின் இருப்பு விவரம், விலை மற்றும் சந்தை நிலவரம் ஆகிய தகவல்களைத் தெரிந்து கொள்ள ஏதுவாக இ-மீன் வலைதள சேவை உருவாக்கப்படும். அனைத்து மாவட்டங்களிலும் மீன்வள கண்காட்சிகள் அமைக்கப்படுவதுடன், நாகப்பட்டினம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய கடலோர மாவட்டங்களில் மாற்றுமுறை மீன்பிடிப்பை ஊக்குவிக்க, 200 நாட்டுப் படகு மீனவா்களுக்கு கணவாய் மீன்பிடி உபகரணங்கள் வழங்கப்படும்.
மீனவா்கள், மீன் வளா்ப்போா் நவீன தொழில்நுட்பங்ளை அறிய திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள் அளிக்கப்படும் என்று அமைச்சா் அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன் அறிவித்தாா்.