சென்னை மெட்ரோ 2ஆம் கட்ட திட்டம்: "ரயில்களை இயக்கும் உரிமை டெல்லி மெட்ரோவுக்கா?" ...
மத்திய அரசால் தடை செய்யப்பட்ட தீவுக்குச் சென்ற அமெரிக்கர் கைது!
இந்தியாவின் அந்தமான் மற்றும் நிகோபார் தீவுகளிலுள்ள தடை செய்யப்பட்ட தனித் தீவுக்கு சட்டவிரோதமாகச் சென்ற அமெரிக்கர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அந்தமான் மற்றும் நிகோபார் தீவுகளில் ஒன்றான வடக்கு சென்டினல் எனப்படும் தனித் தீவில் சென்டினிலீஸ் எனும் பாதுகாக்கப்பட்ட பழங்குடியின மக்கள் வாழ்ந்து வருகின்றனர். பல ஆயிரம் ஆண்டுகளாக வெளி உலகத் தொடர்பு ஏதுமின்றி வாழ்ந்து வரும் மக்களின் பாதுகாப்பைக் கருதி அந்த தீவுக்கு வெளி நபர்கள் யாரும் செல்லக் கூடாது என மத்திய அரசு தடை விதித்துள்ளது.
இந்நிலையில், அமெரிக்காவைச் சேர்ந்த மைகாயிலோ விக்டோரோவைச் பொல்யாகோவ் (வயது 24) என்ற நபர் கடந்த மார்ச் 26 அன்று அந்தமானின் தலைநகர் போர்ட் பிளையருக்கு சென்றுள்ளார். பின்னர், கடந்த மார்ச் 29 அன்று அதிகாலை 1 மணியளவில் குர்மா தெரா கடல் கரையிலிருந்து தனது படகில் தேங்காய்கள் மற்றும் ஒரு கேன் கோலா குளிர்பானத்துடன் தடை செய்யப்பட்ட வடக்கு சென்டினல் தீவை நோக்கிச் சென்றுள்ளார்.
இதனைத் தொடர்ந்து, காலை 10 மணியளவில் அந்த தீவின் வடக்குப் பகுதியைச் சென்றடைந்த அவர் தனது தொலைநோக்கியின் மூலமாக அந்த தீவை ஆய்வு செய்து தனது கேமராவில் விடியோ பதிவு செய்துள்ளார். சுமார் ஒரு மணிநேரம் அந்த தீவிலயே விசில் அடித்து பழங்குடியின மக்களின் வருகைக்காக காத்திருந்துள்ளார். ஆனால், அவர்கள் யாரும் அங்கு வரவில்லை எனக் கூறப்படுகின்றது.
பின்னர், சுமார் 5 நிமிடங்களுக்கு மட்டும் அந்த தீவில் கரையிறங்கிய அவர் கொண்டு வந்த தேங்காய்களை கரையில் வைத்ததுடன் அங்குள்ள மணலை சேகரித்து கொண்டு மதியம் 1 மணியளவில் மீண்டும் அந்தமான் நோக்கி பயணித்து இரவு 7 மணியளவில் குர்மா டெரா கடல் கரையை அடைந்துள்ளார். அப்போது, அவரை சில மீனவர்கள் நோட்டமிட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, தகவலறிந்த குற்றப் புலனாய்வுத் துறை அதிகாரிகள் மைகாயிலோவைக் கைது செய்துள்ளனர். மேலும், அவரிடமிருந்து காற்று ஊதப்பட்ட படகு, கேமரா உள்ளிட்ட சாதனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து காவல் துறை உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், மைகாயிலோ முன்கூட்டியே கடல் அலைகள் குறித்தும், குர்மா டெரா கடலிலிருந்து வடக்கு சென்டினல் தீவுக்கு செல்லும் பாதை என அனைத்தையும் ஆராய்ந்து இந்த குற்றத்தில் ஈடுபட்டுள்ளதாகவும் அவர் ஜி.பி.எஸ். சாதனத்தின் உதவியுடன் தனியாகக் கடலில் பயணம் செய்துள்ளதாகவும் கூறியுள்ளார்.
மேலும், கடந்த 2024 அக்டோபர் மாதம் ஏற்கனவே ஒருமுறை அவர் காற்று ஊதப்பட்ட படகின் மூலம் அந்த தீவுக்கு செல்ல முற்பட்டுள்ளார். ஆனால், அவர் தங்கியிருந்த விடுதி ஊழியர்களால் தடுத்து நிறுத்தியுள்ளனர்.
பின்னர், கடந்த ஜனவரி மாதம் அந்தமான வந்த அவர் தனது படகுக்கு மோட்டார் ஒன்று வாங்க முயன்றுள்ளார். இத்துடன், அந்தப் பயணத்தின்போது அந்தமானின் பராதாங் தீவுகளுக்கு சென்ற மைகாயிலோ சட்டவிரோதமாக ஜராவா பழங்குடியின மக்களை விடியோ பதிவு செய்துள்ளார்.
இந்நிலையில், இந்திய வெளிநாட்டவர் சட்டம் மற்றும் அந்தமான் நிகோபார் தீவுகளின் பழங்குடியின மக்கள் பாதுகாப்புச் சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் மைகாயிலோ மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், அவரது கைது குறித்து இந்திய உள்துறை அமைச்சகத்தின் மூலம் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் மற்றும் அமெரிக்க தூதரகத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
முன்னதாக, வெளி நபர்கள் செல்லத் தடை செய்யப்பட்ட வடக்கு சென்டினல் தீவுகளில் வாழும் சென்டினிலீஸ் மக்கள், எளிதில் பாதிக்கப்படக்கூடிய பழங்குடி குழுவாகக் குறிப்பிடப்படுகிறார்கள். மேலும், வெளி நபர்கள் தங்களது தீவினுள் வருவதை விரும்பாத அம்மக்கள் அத்துமீறி நுழைந்தவர்களை கொன்றுள்ளதாகக் கூறப்படுகின்றது.
கடந்த 2018 ஆம் ஆண்டு நவம்பரில் சென்டினிலீஸ் மக்களுக்கு மதத்தை போதிக்க சென்ற அமெரிக்காவைச் சேர்ந்த ஜான் சாவ் அம்மக்களால் கொல்லப்பட்டு அந்த தீவில் புதைக்கப்பட்டதாக பதிவு செய்ய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க:3 மத்திய ஆசிய நாடுகளுக்கு இடையே ஒப்பந்தம்! ஐக்கிய அரபு அமீரகம் வரவேற்பு!