நிறைவடையும் ரஞ்சனி சீரியல்: அன்னம் தொடரின் ஒளிபரப்பு நேரம் மாற்றம்!
ரஞ்சனி தொடர் இந்த வார இறுதியில் நிறைவடையவுள்ளதால், இத்தொடர் ஒளிபரப்பாகும் நேரத்தில் அன்னம் தொடர் ஒளிபரப்பாகவுள்ளது.
சன் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 10 மணிக்கு ரஞ்சனி தொடர் ஒளிபரப்பாகி வருகிறது. 5 நண்பர்களுக்குள் நடக்கும் சுவாரசியமான நிகழ்வுகளை வைத்து இயக்குநர் விக்ரமனின் புது வசந்தம் பட பாணியில் இத்தொடர் எடுக்கப்பட்டு வருகிறது.
இத்தொடர் ஆரம்பிக்கப்பட்டு சில மாதங்களே ஆன நிலையில் புதிய தொடர் வருகை மற்றும் டிஆர்பி புள்ளிகள் குறைவு போன்ற காரணங்களால் ரஞ்சனி தொடர் இந்த வார இறுதியில் நிறைவடைகிறது.
இந்த நிலையில், இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகும் அன்னம் தொடர் வரும் ஏப். 7 ஆம் தேதிமுதல் இரவு 10 மணிக்கு ஒளிபரப்பு நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
அன்னம் தொடரில் பிரதான பாத்திரத்தில் அயலி இணையத் தொடர் நாயகி அபி நட்சத்திரா நடிக்கிறார்.
மாமன் மகனான கார்த்திக்கை (பரத் குமார்) விரும்பும், அத்தை மகள் அன்னம் (அபி நட்சத்திரா), ஆனால் ரம்யாவை (திவ்யா கணேசன்) காதலிக்கும் கார்த்திக், இப்படியாக முக்கோண காதல் கதையாக இத்தொடர் எடுக்கப்பட்டு வருகிறது.
வரும் ஏப்ரல் 7 ஆம் தேதிமுதல் டெல்னா டேவிஸ் நடிக்கும் ஆடுகளம் தொடர் வாரத்தின் 7 நாள்களும் இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.