வாஜிா்பூரில் பள்ளி நிலத்தை மசூதி, கடைகள் சட்டவிரோதமாக ஆக்கிரமித்துள்ளதா? சரிபாா்...
ஒன் பை டூ
டி.ஜெயக்குமார், முன்னாள் அமைச்சர், அ.தி.மு.க
“உண்மை நிலவரம் தெரியாமல் பேசியிருக்கிறார் விஜய். மூன்று கோடிக் கட்சித் தொண்டர்கள், 52 வருட அரசியல் கட்சி, 30 வருட ஆட்சிப் பொறுப்பு என்று தமிழக அரசியலில் மட்டுமன்றி, இந்திய அரசியலிலும் அசைக்க முடியாத அசுர பலத்துடன் இருக்கிறது அ.தி.மு.க. இன்று மட்டுமல்லாமல், எப்போதுமே தமிழகத்தில் தி.மு.க-வை எதிர்ப்பதற்கு, வெல்வதற்கு... அ.தி.மு.க-வைத் தாண்டி வேறொரு கட்சி இல்லை என்பது தமிழக மக்களுக்கு நன்றாகவே தெரியும். இந்த நிலையை யாராலும் மாற்ற முடியாது. புதிதாகக் கட்சி தொடங்கியிருக்கும் விஜய், தன் கட்சித் தொண்டர்களை உற்சாகப்படுத்த இப்படியெல்லாம் வசனம் பேசியிருக்கிறார். புதிதாக அரசியலுக்கு வரும் அனைவருமே ‘நாங்கள்தான் எதிர்க்கட்சி’ என்று சொல்வது வழக்கமான ஒன்றுதான். தி.மு.க-வுக்கு எதிரான கட்சி என்றைக்குமே அ.தி.மு.க மட்டுமே. 2026-ம் ஆண்டு, தமிழகத்தில் ஆட்சி அமைக்கப்போவதும் நாங்கள்தான். இந்த உண்மைக் கள நிலவரம் அனைத்தும், அரசியல் மேடைகளில் சினிமா வசனம் பேசும் விஜய்க்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை!”
சி.டி.ஆர்.நிர்மல்குமார், துணைப் பொதுச்செயலாளர், த.வெ.க
“இருக்கும் உண்மை நிலையைச் சொல்லியிருக்கிறார் எங்கள் தலைவர். தி.மு.க போன்ற கட்சிகள் வெளியில் பா.ஜ.க-வை எதிர்ப்பதுபோல எதிர்த்துவிட்டு, பின்வாசலில் உறவாடிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால், கட்சி ஆரம்பிக்கும்போதே மிகத் தெளிவாக ‘எங்கள் அரசியல் எதிரி தி.மு.க; கொள்கை எதிரி பா.ஜ.க’ என்று சொல்லிவிட்டார் எங்கள் தலைவர். சொன்னது மட்டுமன்றி, இந்த இரண்டு அரசின் யதேச்சதிகாரப் போக்குகளையும் கண்டிப்பதோடு, முதல் ஆளாகக் குரல் கொடுப்பதும் எங்கள் தலைவர்தான். எங்கள் கட்சியின் வளர்ச்சியை, எங்கள் தலைவருக்கு மக்களிடையே இருக்கும் வரவேற்பைப் பார்த்து தி.மு.க-வும் அஞ்சி நடுங்குகிறது. அந்த வகையில், த.வெ.க - தி.மு.க-வுக்குத்தான் போட்டி என்று எங்கள் தலைவர் சொன்னதில் எந்தத் தவறும் இல்லை. இத்தனை ஆண்டுகள் போராடியும் அ.தி.மு.க-வால், தி.மு.க-வை வீழ்த்த முடியவில்லை. ஆனால், மக்கள் துணையுடன் வரும் தேர்தலில், ஆளும் தி.மு.க ஆட்சியை அகற்றுவார் எங்கள் தலைவர் விஜய். அவரின் தலைமையிலான த.வெ.க ஆட்சி அமைவதை அனைவரும் பார்க்கத்தான் போகிறோம்!”