பண்ருட்டி பலா, முந்திரி உள்ளிட்ட 6 பொருள்களுக்கு புவிசார் குறியீடு!
'அவரைக் கூப்பிடாதீங்க'னு எல்லார்கிட்டயும் சொல்லியிருக்காராம்’ - தாடி பாலாஜி vs தவெக பஞ்சாயத்து
ஆரம்பத்தில் திமுக அனுதாபியாக இருந்தவர் நடிகர் தாடி பாலாஜி. விஜய் தமிழக வெற்றி கழகத்தைத் தொடங்கியதும், அதில் சேர ஆர்வம் காட்டி வந்தார். கள்ளக்குறிச்சியில் நடந்த தவெக-வின் முதல் மாநாட்டில் கலந்து கொண்டார். தவெக நிர்வாகிகள் ஏற்பாடு செய்யும் கூட்டங்களில் கலந்து கொண்டார். போதாக்குறைக்கு விஜய்-யின் உருவத்தை நெஞ்சில் பச்சை குத்தினார்.
சில மாதங்களுக்கு முன் தவெக-வில் பல பொறுப்புகளுக்கு நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டனர். பாலாஜியும் பதவியை எதிர்பார்த்தாரா எனத் தெரியவில்லை, ஆனால் அப்போது அவர் வைத்திருந்த சில வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ்கள் கட்சி மீது அவருக்கு இருந்த அதிருப்தியைக் காட்டின.
இது தொடர்பாக அப்போதே நாமும் செய்தி வெளியிட்டிருந்தோம்.
தொடர் அதிருப்தி?
இருந்தாலும், தொடர்ந்து வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் மூலம் கட்சி தொடர்பான ஏதாவதொரு அதிருப்தியை வெளிப்படுத்தியே வருகிறார். சில தினங்களுக்கு முன் சென்னை அம்பத்தூரில் தவெக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இப்தார் விருந்தில் உணவுப் பொருட்கள் வீணாக்கப்பட்டது தொடர்பான காணொளியை வெளியிட்டிருந்தார்.
'தொடர்ந்து கலகக்குரல் எழுப்பிட்டே இருக்கீங்களே, என்னதான் பிரச்னை' என அவரிடமே கேட்டோம்.

`கெட்ட பெயர் தளபதி வரைக்கும் போகுது’
''கட்சி சார்பா நடக்கற சின்ன நிகழ்ச்சின்னாக் கூட அதுல ஒரு சொதப்பல் நடந்திச்சுன்னா கெட்ட பெயர் தளபதி வரைக்கும் போகுது. அதனால ஒரு வேலையைச் செஞ்சா கூடுதலா கொஞ்சம் பொறுப்பு எடுத்துகிட்டு கொஞ்சம் மெனக்கெட்டு நிகழ்ச்சியை நல்லபடியா நடத்துங்கனுதான் சொல்றேன். தளபதி பெயர், கட்சியின் பெயர் ரெண்டும் டேமேஜ் ஆகக் கூடாதுனுதான் இதைச் சொல்றேன்.
கோபம் வருமா வராதா?
அம்பத்தூர் இப்தார் விருந்து, பொதுச் செயலாளர் கலந்துகிட்ட நிகழ்ச்சி. தளபதி விஜய்யின் முகமாகத்தான் நிகழ்ச்சி மேடைக்கு பொதுச்செயலாளர் வர்றார். அப்படியிருக்க அந்த நிகழ்ச்சியே சொதப்பலா நடந்து கடைசியில் உணவை வீணாக்கி குப்பையில கொட்டுறாங்கன்னா என்ன சொல்றது? ஏற்பாட்டாளர்கள் மீது கோபம் வருமா வராதா?

அந்தக் கோபத்தையே வெளிப்படுத்தினேன். நாம இப்படிச் சொல்றது சிலருக்கு பிடிக்க மாட்டேங்குது. சிலர்னு ஏன் சொல்லணும்? பொதுச் செயலாளரே கடுப்பாகிறாராம். வாய் மொழி உத்தரவாக, `பாலாஜியை கிட்ட சேக்க வேண்டாம். எந்த நிகழ்ச்சிக்கும் அவரைக் கூப்பிடாதீங்க'னு’ ஆனந்த் சார் சொல்லியிருக்கறதா சொல்றாங்க.
எனக்கு என்ன வருத்தம்னா புதுசா கட்சி ஆரம்பிச்சிருக்கோம். பல தரப்புலயும் ஏற்கனவே கடுப்புல இருக்காங்க. அடுத்த வருஷம் தேர்தல் வருது. அதனால கட்சியின் ஒவ்வொரு நடவடிக்கையையும் கூர்ந்து கவனிச்சிட்டிருக்காங்க. ஏதாவது வில்லங்கத்துல சிக்க மாட்டாங்களானு பலரும் காத்திருக்கிற சூழல்ல ஏனோ தானோன்னு இருந்தா யாருக்கு நஷ்டம்? அதனால மனசு கேக்காமத்தான் சமயத்துல வாட்ஸ் அப் ஸ்டேட்டஸா வச்சிட்டுத் திரியறேன்” எனப் புலம்புகிறர்.
விரைவிலேயே நடிகர் விஜய்யை நேரில் சந்தித்து தன்னுடைய இந்த மனக்குமுறல்களையெல்லாம் கொட்டும் முடிவிலும் இருக்கிறாராம் பாலாஜி.!