சச்சின் பதிவை 1,000 முறை படித்த ஷஷாங் சிங்..! இன்ஸ்டா பயன்பாட்டினை குறைக்க அறிவுறுத்திய கேப்டன்!
பஞ்சாப் சூப்பர் கிங்ஸ் யூடியூப் சேனலில் ஷஷாங் சிங் பேட்டியளித்துள்ளார்.
கடந்தாண்டும் சிறப்பாக விளையாடியதால் ஷஷாங் சிங் பஞ்சாப் அணியினால் ரூ.5.5 கோடிக்கு தக்கவைக்கப்பட்டார்.
கடந்தாண்டு 354 ரன்கள், 164.65 ஸ்டிரைக் ரேட்டுடன் விளையாடினார். தற்போது, புதிய கேப்டன் ஷ்ரேயாஸ் அவரை சமூக வலைதளங்களில் இருந்து விலகி இருக்குமாறு கூறியுள்ளார்.
அதற்காக தனது மொபைலில் ஸ்கிரீன் டைம் வைத்து பின்பற்றி வருவதாகக் கூறியுள்ளார்.
ஷஷாங் சிங் பேசியதாவது:
எத்தனை ஃபாலோயர்கள் வந்திருக்கிறார்கள்?
3 ஆண்டுகளுக்கு முன்பாக நான் முதலில் சென்று எனது இன்ஸ்டாவில் எத்தனை பேர் ஃபாலோவ் செய்கிறார்கள் எனப் பார்த்திருப்பேன்.
ஆனால், எப்போதும் அதையே செய்திருந்தால் என்னால் எனது கிரிக்கெட் வாழ்க்கையில் நிலைத்து நிற்க முடியாமல் போகும்.
முன்பெல்லாம் நான் எத்தனை ஃபாலோயர்கள் வந்திருக்கிறார்கள் என்று பார்ப்பேன்.
தற்போது, யாரெல்லாம் எனக்கு குறுஞ்செய்தி அனுப்பியிருக்கிறார்கள் என்றும் நான் டிரெண்டிங்கில் இருக்கிறேனா எனவும் பார்ப்பேன்.
தலையெழுத்தை நிர்ணயிக்கும் 2 மாதங்கள்
ஐபிஎல் நடைபெறும் இந்த 2 மாதங்கள்தான் எனது தலையெழுத்தை நிர்ணயிக்கும் முக்கியமான மாதங்களாக இருக்கின்றன. அதனால், எனக்கு ஐபிஎல் போட்டிகளில் விளையாடுவது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும்.
சில நாள்களுக்கு முன்பாக காலை உணவின்போது ஷ்ரேயாஸ் என்னிடம் நீண்ட நாள்களாக இன்ஸ்டாகிராம் பக்கம் இல்லாமல் இருப்பதால் நல்ல பலன் இருப்பதாகக் கூறினார். நானும் அதை முயற்சித்து பார்த்தேன்.
எனது மொபைலில் 45 நிமிஷங்களுக்கு என டைமர் வைத்திருக்கிறேன். ஆனால், நான் அந்த அலாரம் வரும்போதும் ஸ்கிப் செய்து உபயோகித்து வருகிறேன் என்றார்.
சச்சின் ட்வீட்டை (எக்ஸ் பதிவு) 1,000 முறை படித்தேன்
சன்ரைசரஸ் அணியில் 2022ஆம் ஆண்டு ஷஷாங் சிங் விளையாடும்போது கேகேஆர் பேட்டர் ரஹானே அடித்த பந்தினை எல்லைக் கோட்டுக்கு அருகில் பாய்ந்து கேட்ச் பிடிப்பார்.
இது குறித்து அப்போது சச்சின் டெண்டுல்கர் ஷஷாங் சிங்கை பாராட்டி தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருப்பார்.
அதில் சச்சின், “எல்லைக் கோட்டில் கேட்ச் பிடிப்பது இன்னும் இன்னும் சிறப்படைந்தே வருகின்றன. ஷஷாங் நம்பமுடியாத கேட்ச்” என அவரை டேக் செய்து பதிவிட்டிருப்பார்.
இந்தப் பதிவைதான் ஷஷாங் சிங் 1,000முறை படித்திருப்பதாகக் கூறியுள்ளார். மேலும் அதனை தனது வாட்ஸ்-ஆப் ஸ்டேடஸில் அனைவரும் பார்க்குமாறு வைத்துள்ளது குறித்தும் நெகிழ்ச்சியாகப் பேசியுள்ளார்.