தனுஷ் விவகாரம் : `உங்கள் பங்கிற்கு ஒரு புதிய அரசியலை புகுத்தாதீர்கள்' - ஆர்.கே.செல்வமணி ஆவேசம்
நடிகர் தனுஷ் ஃபைவ் ஸ்டார் கிரியேஷன்ஸ் நிறுவனத்தில் அட்வான்ஸ் பெற்றுவிட்டு கால்ஷிட் கொடுக்காத விவகாரம் முன்பு சர்ச்சையாக எழுந்திருந்தது.
அதனை தொடர்ந்து கடந்த திங்கட்கிழமை இந்த விவகாரம் தொடர்பாக ஃபெஃப்சி தலைவர் இயக்குநர் ஆர்.கே.செல்வமணியிடம் பல கேள்விகளைக் கேட்டு அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார் ஃபைவ் ஸ்டார் கிரியேஷன்ஸ் தயாரிப்பு நிறுவனத்தின் பங்குதாரர் கலைச்செல்வி.

இந்த அறிக்கை வெளியானதை தொடர்ந்து இயக்குநர் ஆர்.கே.செல்வமணி நிகழ்வு ஒன்றில் இது தொடர்பாக பேசியிருந்தார்.
தற்போது கலைச்செல்வி வெளியிட்ட அறிக்கைக்கு பதில் அறிக்கை ஒன்றை ஆர்.கே.செல்வமணி வெளியிட்டிருக்கிறார்.
அந்த அறிக்கையில் அவர், `` 30.9.2024 அன்று தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தில் நடைபெற்ற கூட்டத்தில, தாங்கள் திரு.தனுஷ் அவர்களிடம் Call sheet கேட்டு நீங்கள் புகார் அளிக்கவில்லை.
தாங்கள் சில வருடங்களுக்கு முன்னால் திரு.தனுஷ் அவர்களுக்கு 3 கோடி அட்வான்ஸ் கொடுத்ததாகவும், அதை இப்போது அவர் 16 கோடியாக திருப்பி தர வேண்டும் என்பது தான் தாங்களும், தங்கள் கணவரும் அளித்த புகார்.

ரூ.3 கோடி அட்வான்ஸ் கொடுத்துவிட்டு, ரூ.16 கோடி கேட்பது நியாயம் இல்லை என நடிகர் சங்கத்தின் சார்பில் தெரிவித்த போது, நாங்கள் வட்டிக்கு வாங்கி, பணம் கொடுத்துள்ளோம். எனவே வட்டி எல்லாம் சேர்த்து இந்த நாள் வரை 16 கோடி ஆகிறது.
நாம் வட்டி கடை நடத்தவில்லை
எனவே திரு.தனுஷ் அவரிடம் ரூ.16 கோடி வாங்கி தர வேண்டும் என்பதே தங்களின் கோரிக்கை. நாம் வட்டி கடை நடத்தவில்லை, சங்கம் நடத்துகிறோம். எனவே இது சரியல்ல என நடிகர் சங்க நிர்வாகிகள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
தங்கள் கணவர் திரு.கதிரேசன் நிலையை சம்மேளனமும், தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கமும் அவர்களுக்கு எடுத்து கூறி 3 கோடிக்கு மேலாக ஒரு தொகையை பெற்று தருமாறு வேண்டுகோள் விடுத்தோம்.

நடிகர் சங்கம் நிர்வாகிகள் சம்மந்தப்பட்டவர்களிடம் ஆலோசனை செய்து அதிக பட்சம் 3 கோடிக்கு இரண்டு மடங்காக 6 கோடி வரை பெற்று தர முடியும் என தெரிவித்தனர்.
அதை Five Star நிறுவனத்தின் பங்குதாரர்களில் ஒருவராகிய திரு.கதிரேசன் அவர்கள் ஏற்கவில்லை. திரு.கதிரேசன் அவர்கள் என்னுடைய நெடுநாள் நண்பர் என்பதாலும், திரு.தனுஷ் அவர்கள் என்னுடைய நண்பரின் மகன் என்ற முறையிலும், எனக்கும் நன்கு நட்புள்ளது என்பதின் அடிப்படையிலும், தனிப்பட்ட முறையில் இதற்கு மேல் ஏதாவது பெற்று தர முடியுமா என முயற்சிக்கிறேன் என தெரிவித்தேன்.
`புதிய அரசியலை புகுத்தாதீர்கள்’
புதிய பிரச்னையை உருவாக்க திரு.மோடி முதல் திரு.டிரம்ப் வரை மேலிடத்து உத்தரவு என நீங்கள் யாரையாவது கொண்டுவர முயற்சிக்கலாம். நடந்தது இவ்வாறு இருக்க ஏதோ மேலிடத்து உத்தரவு என்ற புதிய அரசியலை புகுத்த முயற்சித்துள்ளீர்கள். திரைப்பட சங்கங்களில் ஏற்கனவே பல்வேறு அரசியல் நடக்கின்றது.
நீங்களும் உங்கள் பங்கிற்கு ஒரு புதிய அரசியலை புகுத்தாதீர்கள். ஏற்கனவே நாங்கள் அக்டோபர் 30-க்குள் ஒரு நல்ல நியாயம் பெற்று தருவோம் என உறுதி அளித்தாலும், திரு.முரளி மற்றும் திரு.ராதாகிருஷ்ணன் அவர்களின் வேண்டுகோளை சம்மந்தப்பட்டவர்களிடம் தொடர்ந்து பேசி வந்தோம்.

அதன் பயனாக 8கோடி வரை பெற இயலும் என்ற நிலையை எய்தினோம்.
இறுதியாக திரு.தனுஷ் அவர்கள் "அண்ணா இந்த தொகை நியாயம் இல்லை என்றாலும் உங்களுக்காகவும், தயாரிப்பாளர்கள் சங்க வேண்டுகோளுக்காகவும் மட்டுமே நான் இதற்கு சம்மதிக்கிறேன்.
இதற்கு மேல் ஒரு ரூபாய் கூட வழங்க நான் தயாராக இல்லை வேண்டுமானால் அவர்கள் நீதிமன்றத்திற்கு செல்லட்டும், நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்" என்று கண்டிப்புடன் கூறி விட்டார்." எனக் குறிப்பிட்டிருக்கிறார்.