CSK : 'பிரச்னைகளை சமாளிக்க புதிய இளம் வீரரை அழைத்து வரும் சிஎஸ்கே? - யார் இந்த ஆயுஷ் மாத்ரே
'சென்னையின் அழைப்பு!'
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மும்பையை சேர்ந்த 17 வயதே ஆன ஆயுஷ் மாத்ரே என்கிற வீரரை திடீரென சேப்பாக்கத்துக்கு ட்ரையல்ஸூக்காக அழைத்திருக்கிறது. யார் இந்த ஆயுஷ் மாத்ரே? அவரை சிஎஸ்கே தங்களின் அணிக்குள் சேர்க்கவிருக்கிறதா?

'பின்னணி!'
ஆயுஷ் மாத்ரே மும்பையை சேர்ந்த இளம் வீரர். கடைசி ரஞ்சி சீசனில்தான் மும்பை அணிக்காக அறிமுகமாகியிருந்தார். 8 ரஞ்சி போட்டிகளில் ஆடி 471 ரன்களை எடுத்திருந்தார். மகாராஷ்ட்ராவுக்கு எதிரான ஒரு போட்டியில் 176 ரன்களை எடுத்திருந்தார். அதேமாதிரி, விஜய் ஹசாரே தொடரிலும் கடைசி சீசனில்தான் அறிமுகமாகியிருந்தார். அதில் 7 போட்டிகளில் 458 ரன்களை எடுத்திருந்தார். ஆவரேஜ் 65 ஆக இருந்தது. இரண்டு சதங்களையும் ஒரு அரைசதத்தையும் அடித்திருந்தார்.
'Unsold' வீரர்!
நவம்பரில் நடந்திருந்த மெகா ஏலத்தில் ஆயுஷ் மாத்ரேவை எந்த அணியும் வாங்கவில்லை. 'Unsold' ஆகியிருந்தார். இந்நிலையில்தான், சென்னை அணி அவரை திடீரென ட்ரையல்ஸூக்காக அழைத்திருக்கிறது. ராஜ் கோட்டில் பயிற்சியில் ஈடுபட்டிருந்த அவர் சேப்பாக்கம் மைதானத்துக்கு வந்திருக்கிறார்.

இதுசம்பந்தமாக பேசியிருக்கும் சென்னை அணியின் தலைமைச் செயல் அதிகாரி காசி விஸ்வநாதன், 'எங்களின் Scouting குழு அவரின் செயல்பாட்டினால் ஈர்க்கப்பட்டிருந்தார்கள். அதனால்தான் அவரை ட்ரையல்ஸூக்கு அழைத்திருக்கிறோம். எங்கள் அணியில் யாருக்கும் காயம் இல்லை. தேவை ஏற்படும்பட்சத்தில் ஆயுஷை அணியில் சேர்த்துக் கொள்வோம்.' எனப் பேசியிருக்கிறார்.
சென்னை அணியில் எதாவது வீரருக்கு காயம் ஏற்படும்பட்சத்தில் ஆயுஷை ரீப்ளேஸ்மெண்ட் வீரராக சேர்க்க வாய்ப்பிருக்கிறது.