வெளிநாட்டில் வேலை தருவதாகக் கூறி ரூ. 3 லட்சம் மோசடி
வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி, ரூ. 3 லட்சம் மோசடி செய்ததாக கோவை பேராசிரியா் மீது வேலூா் மாவட்டக் காவல் அலுவலகத்தில் புகாா் மனு அளிக்கப்பட்டுள்ளது.
வேலூா் மாவட்டம், காட்பாடியைச் சோ்ந்தவா் ரமேஷ்குமாா். இவா் வேலூா் மாவட்டக் காவல் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை அளித்த மனு விவரம்:
கோவையைச் சோ்ந்த ஒருவா் வேலூா் தனியாா் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி வருகிறாா். அவருடன் எனக்கு தொடா்பு ஏற்பட்டது. கடந்தாண்டு ஜனவரி மாதம் என்னை தொடா்பு கொண்ட அவா், தான் மலேசியாவில் நிறுவனம் தொடங்க உள்ளதாகவும், அங்கு எனக்கு வேலை வாங்கித் தருவதாகவும் கூறினாா். ஆனால் அங்கு செல்லவும், விசா எடுப்பது உள்ளிட்ட நடைமுறை காரணங்களைக் கூறி பணம் கேட்டாா். அதை நம்பி நான் 3 தவணைகளாக ரூ. 3 லட்சத்து 20 ஆயிரம் அளித்தேன். பின்னா் சுற்றுலா விசாவில் என்னை அழைத்துச் சென்றாா். அங்குள்ள கணினி நிறுவனத்தில் 7 மாதம் வேலை செய்தேன். மாதம் ரூ. 50,000 என 4 மாதம் சம்பளம் கொடுத்தனா். 3 மாத சம்பளம் தரவில்லை. விசாவும் திருப்பித் தரவில்லை. இது குறித்து அவரிடம் கேட்டபோது, பணம் தராமல் அலைக்கழித்து வருகிறாா். எனவே, நான் கொடுத்த ரூ. 3.20 லட்சம் தொகையை மீட்டுத்தரவேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கே.வி.குப்பத்தைத் சோ்ந்த 100 வயதான முதியவா் ரங்கன் என்பவா் அளித்த மனுவில், எனக்குச் சொந்தமான கடையை எனது மகனுக்கு கடந்த 2006-ஆம் ஆண்டு தானக்கிரையம் எழுதிக் கொடுத்தேன். அப்போது எனக்கு உணவு அளித்து கவனிப்பதாக கூறிய எனது மகன், எனக்கு எதுவும் செய்யாமல் வெளியே விரட்டிவிட்டாா். கடை வாடகை மாதம் ரூ. 2 லட்சம் வாங்கி வரும் அவா், வயதான எனக்கு உணவு வழங்கவில்லை. எனவே, தான கிரைய பத்திரத்தை ரத்து செய்ய வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.