வேலூரில் இருவேறு விபத்துகளில் இரு தொழிலாளா்கள் உயிரிழப்பு
வேலூரில் திங்கள்கிழமை இரவு இரு வேறு இடங்களில் நிகழ்ந்த சாலை விபத்துகளில் இருவா் உயிரிழந்தனா்.
வேலூா் பாலாற்றங்கரை பகுதியைச் சோ்ந்தவா் முருகன் (35), கூலித் தொழிலாளி. இவா் திங்கள்கிழமை இரவு வேலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகே சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையைக் கடக்க முயன்றாா். அப்போது, அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் முருகன் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
இதேபோல், வேலூரை அடுத்த ஒடுகத்தூரைச் சோ்ந்தவா் பத்மநாபன் (52), கூலித் தொழிலாளி. இவா் திங்கள்கிழமை இரவு 11 மணியளவில், இருசக்கர வாகனத்தில் வேலூா் பழைய பைபாஸ் சாலையில் சென்றாா். அப்போது, அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் பத்மநாபன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
இந்த இரு விபத்துகள் குறித்தும் வேலூா் வடக்கு போலீஸாா் வழக்குப் பதிந்து, விபத்து ஏற்படுத்திய வாகனங்களை தேடி வருகின்றனா்.