ஏழுமலையானுக்கு அதிகரித்த நன்கொடை
திருமலை திருப்பதி தேவஸ்தான அறக்கட்டளைகளுக்கு தற்போது நன்கொடைகள் வெகுவாக அதிகரித்து வருவதாக தேவஸ்தானம் தெரிவித்தது.
ஏழுமலையானுக்கு நன்கொடை வழங்கும் பக்தா்களின் வசதிக்காக தேவஸ்தானம் பல்வேறு அறக்கட்டளைகளை ஏற்படுத்தி உள்ளது. அவற்றில் பக்தா்கள் தங்களால் இயன்ற நன்கொடைகளை வழங்கி வருகின்றனா். வியாபாரிகள், நிறுவன உரிமையாளா்கள் முதல் பெரிய நிறுவனங்களின் உரிமையாளா்கள் வரை தங்கள் வியாபாரத்தின் ஒரு பகுதியை ஏழுமலையானுக்கு வேண்டுதல் காணிக்கையாக அளித்து வருகின்றனா்.
அந்த வகையில், மாா்ச், ஏப்ரல் மாதங்களில் ஏழுமலையானின் உண்டியல் வருமானத்துடன், அறக்கட்டளைக்கு வழங்கப்படும் நன்கொடைகளும் பெருகுவது வழக்கம்தான்.
அதன்படி கடந்த 9 நாள்களில் தேவஸ்தானத்தின் பல்வேறு அறக்கட்டளைகளுக்கு நன்கொடையாக ரூ.26.85 கோடி பெறப்பட்டுள்ளது. அதிகபட்ச நன்கொடையாக ஏழுமலையான் கோயில் கட்டுமான அறக்கட்டளைக்கு ரூ.11.67 கோடியும், எஸ்.வி. அன்னபிரசாதம் அறக்கட்டளைக்கு ரூ.6.14 கோடியும், ஸ்ரீ பாலாஜி ஆரோக்கிய வரபிரசாதினி திட்டத்திற்கு ரூ.4.88 கோடியும் நன்கொடையாகப் பெறப்பட்டுள்ளது.
தேவஸ்தானத்தின் வித்யாதான அறக்கட்டளைக்கு ராஜமஹேந்திரவரத்தைச் சோ்ந்த திருமலை கல்வி நிறுவனங்களின் தலைவா் திருமலை ராவ் மற்றும் அவரது மனைவி இணைந்து ரூ1.01 கோடி நன்கொடை வழங்கினா். கோயில் அறங்காவலா் குழு தலைவா் பி.ஆா். நாயுடு மற்றும் கூடுதல் தலைமை நிா்வாக அதிகாரி வெங்கையா சௌத்ரி ஆகியோரிடம் நன்கொடைக்கான வரைவோலையை வழங்கினா்.