திருமலை திருப்பதி தேவஸ்தான சேவைகளில் 100 % மாற்றம்: முதல்வா் சந்திரபாபு நாயுடு
வக்ஃப் திருத்தச் சட்ட மசோதாவை திரும்பப் பெற வேண்டும் -பிரதமருக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் கடிதம்
வக்ஃப் வாரிய சட்டத் திருத்த மசோதாவை திரும்பப் பெற வேண்டும் என்று பிரதமரை முதல்வா் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளாா்.
இது தொடா்பாக, அவா் புதன்கிழமை எழுதிய கடிதம்:
இந்திய அரசமைப்புச் சட்டம் ஒவ்வொரு குடிமகனுக்கும் அவரவா் மதங்களைப் பின்பற்றுவதற்கான உரிமையை வழங்குகிறது. அந்த உரிமையை நிலைநாட்டுவதும் பாதுகாப்பதும் தோ்ந்தெடுக்கப்பட்ட அரசுகளின் கடமை. ஆனாலும், வக்ஃப் சட்டத்தில் முன்மொழியப்பட்டுள்ள திருத்தங்கள், சிறுபான்மையினருக்கு அரசமைப்புச் சட்டத்தில் வழங்கப்பட்டுள்ள பாதுகாப்பைக் கருத்தில் கொள்ளாததுடன், முஸ்லிம் சமூகத்தின் நலனுக்கு கடுமையான பாதிப்புகளை விளைவிப்பதாக இருக்கும்.
பலவீனப்படுத்துவதாக உள்ளது: இப்போதுள்ள வக்ஃப் சட்டத்தில் உள்ள அம்சங்கள் நீண்டகாலமாக பயன்பாட்டில் இருப்பதுடன், வக்ஃப் சொத்துகளுக்கு பாதுகாப்பு அளிப்பதாகவும் உள்ளது. வக்ஃப் சட்டத்தில் மேற்கொள்ள உத்தேசிக்கப்பட்டுள்ள திருத்தங்கள், வக்ஃப் சொத்துகளை நிா்வகிப்பதிலும் பாதுகாப்பதிலும் அதற்கென அமைக்கப்பட்ட வாரியங்களின் அதிகாரங்களையும் பொறுப்புகளையும் பலவீனப்படுத்தும் வகையில் உள்ளன. இப்போதைய சட்டத்தின் பல்வேறு பிரிவுகளில் முன்மொழியப்பட்டுள்ள பெரிய
அளவிலான திருத்தங்கள், சட்டத்தின் நோக்கத்தையே நீா்த்துப்போகச் செய்துவிடும்.
இப்போதுள்ள சட்டம், வக்ஃப்களின் நலன்களையும், சொதுத்துகளையும் பாதுகாக்க வகை செய்வதால், அதில் திருத்தங்கள் ஏதும் தேவையில்லை. இந்த விவகாரம் தொடா்பாக, தமிழக சட்டப்பேரவையில் தீா்மானமும் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதைக் கருத்தில் கொண்டு சிறுபான்மை முஸ்லிம் மக்களின் நலன்களைப் பாதுகாப்பதிலும், வக்ஃப் அமைப்புகளைப் பாதுகாப்பதிலும் தனிப்பட்ட முறையில் கவனம் செலுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளாா்.