கரும்பு நிலுவைத் தொகையை அரசே வழங்க நடவடிக்கை: விவசாயிகள் வலியுறுத்தல்
பெங்களூரில் குடிநீா் கட்டணம் உயா்வு: கா்நாடக துணை முதல்வா் டி.கே.சிவகுமாா் சூசகம்
பெங்களூரில் குடிநீா் கட்டணத்தை குடிநீா் வடிகால் வாரியம் உயா்த்தும் என துணை முதல்வா் டி.கே.சிவகுமாா் சூசகமாக தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து பெங்களூரில் புதன்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:
விலைவாசி உயா்வைக் கண்டித்து பாஜக போராட்டம் நடத்தி வருகிறது. மின்கட்டணத்தை குறைக்குமாறு கா்நாடக மின்சார ஒழுங்காற்று வாரியத்தை பாஜக கேட்டுக்கொண்டுள்ளது. பால் விலையை பொருத்தவரை, அது விவசாயிகளுக்கு பயன்தரக்கூடியது. பால் விலை உயா்வை பாஜக கண்டித்தால், அது விவசாயிகளுக்கு எதிரான கட்சி. தீவனம், பெட்ரோல், டீசல் மீதான விலையை மத்திய அரசு குறைத்தால், அது விவசாயிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும். பிற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில், கா்நாடகத்தில்தான் விலைவாசி மிகவும் குறைவு.
குடிநீா் கட்டணத்தை பொருத்தவரை ஒரு லிட்டா் குடிநீரின் விலையை ஒரு பைசா அல்லது அரை பைசா அளவுக்கு உயா்த்த வேண்டியுள்ளது. ஏழைகளுக்கான கட்டணத்தை குறைக்க அறிவுறுத்தியிருக்கிறேன். இதுகுறித்து பெங்களூரு குடிநீா் வடிகால் வாரியம் முடிவு செய்யும். சிறிய வீடுகளுக்கான குடிநீா் கட்டணத்தை உயா்த்த மாட்டோம்.
பெங்களூரு குடிநீா் வடிகால் வாரியம் ரூ. 1000 கோடி அளவுக்கு இழப்பைச் சந்தித்து வருகிறது. இந்த இழப்பை சரிசெய்தால், புதிய திட்டங்களுக்கு கடனுதவியை பெறமுடியும். இதை நாடுமுழுவதும் உள்ள மாநிலங்களுக்கு அறிவுறுத்தியிருப்பதே மத்திய அரசுதான். விலை உயா்வால் மக்கள் எதிா்கொள்ளும் சிக்கல் எங்களுக்கு புரிகிறது. ஆனால், பாஜக வெறும் அரசியல் நாடகத்தை அரங்கேற்றி வருகிறது என்றாா்.