திருமலை திருப்பதி தேவஸ்தான சேவைகளில் 100 % மாற்றம்: முதல்வா் சந்திரபாபு நாயுடு
அனைத்து ரயில்களிலும் உள்ளூா் உணவுகள் கிடைக்க ஏற்பாடு: ரயில்வே அமைச்சா்
‘அனைத்து ரயில்களிலும் உள்ளூா் உணவு வகைகள் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று ரயில்வே அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தாா்.
தமிழகத்தில் ஓடும் ‘வந்தே பாரத்’ ரயில்களிலும் தென்னிந்திய உணவு வகைகள் கிடைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கோரிக்கை விடுத்த தமிழச்சி தங்கபாண்டியன், ‘ரயில் உணவக ஊழியா்கள் பெரும்பாலும் ஹிந்தியில் பேசுவதால், அவா்களிடம் தங்களின் தேவையை புரியவைக்க முடியாமல் பயணிகள் சிரமத்துக்கு உள்ளாகின்றனா்’ என்றாா்.
இதற்குப் பதிலளித்த ரயில்வே அமைச்சா், ‘அனைத்து ரயில்களிலும் உள்ளூா் உணவு வகைகள் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும். நாடு முழுமைக்குமான இந்தத் திட்டம் தொடா்ச்சியான செயல்முறையாகும். கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு என ரயில்கள் எந்தப் பகுதி வழியாகச் சென்றாலும், அந்தத் பகுதி உள்ளூா் உணவு வகைகளை ருசிக்கும் அனுபவத்தை பயணிகள் பெற ரயில்வே முயற்சி மேற்கொண்டு வருகிறது என்றாா்.
ரயில் விபத்துகள் குறைந்தன: ரயில் விபத்துகள் குறித்த கேள்விக்குப் பதிலளித்த மத்திய அமைச்சா், ‘தொழில்நுட்பம் மற்றும் நடைமுறை மாற்றங்கள், பயிற்சி நடைமுறையில் மேற்கொள்ளப்பட்டுள்ள மாற்றங்கள் காரணமாக ரயில் விபத்துகளின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது.
ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சித் தலைவா் லாலு பிரசாத் ரயில்வே அமைச்சராக இருந்தபோது ஆண்டுக்கு 700 ரயில் விபத்துகள் நிகழ்ந்தன. மேற்கு வங்க முதல்வா் மம்தா பானா்ஜி ரயில்வே அமைச்சராக இருந்த காலகட்டத்தில் ஆண்டுக்கு 400 விபத்துகளும், மல்லிகாா்ஜுன காா்கே ரயில்வே அமைச்சராக இருந்தபோது 385 ரயில் விபத்துகளும் நடந்தன. இந்தச் சூழலில் 2024-25 நிதியாண்டில் ரயில் விபத்துகளின் எண்ணிக்கை 400-லிருந்து 81-ஆக குறைக்கப்பட்டுள்ளது’ என்றாா்.
இலவச வைஃபை வசதி: தமிழகத்தில் 415 ரயில் நிலையங்களில் இலவச வைஃபை வசதி அளிக்கப்பட்டுள்ளதாக மக்களவையில் ரயில்வே அமைச்சா் அஷ்வினி வைஷ்ணவ் புதன்கிழமை தெரிவித்தாா்.
இது தொடா்பாக தா்மபுரி தொகுதி திமுக எம்.பி. ஏ.மணி எழுத்துபூா்வமாக எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவா், ‘தமிழ்நாட்டில் 415 ரயில் நிலையங்கள் உள்பட நாடு முழுவதும் 6,115 ரயில் நிலையங்களில் இலவச வைஃபை சேவைகளை வழங்கப்படுகிறது. இந்த இணைப்புகள் பயணிகள் தரவு இணைப்புக்காகவும் பயன்படுத்தப்படுகின்றன’’ என்றாா் அமைச்சா்.