Edapadi-யிடம் இதை எதிர்பார்க்காத Amit shah... பற்ற வைத்த Annamalai? | Elangovan ...
இஸ்ரோ விஞ்ஞானிகளில் 23% பெண்கள் என்பது இந்தியாவுக்கான பெருமை: முன்னாள் தலைவா் எஸ். சோமநாத்
இஸ்ரோ விஞ்ஞானிகளில் 23 விழுக்காடு பெண்கள் என்பது இந்தியாவுக்கான பெருமை. வேறு எந்த அறிவியல் நிறுவனத்திலும் இத்தகைய சிறப்பு இல்லை என்றாா் இஸ்ரோ நிறுவன முன்னாள் தலைவா் எஸ். சோம்நாத்.
ஸ்ரீமதி இந்திராகாந்தி கல்லூரியில் புதன்கிழமை நடைபெற்ற 40 ஆவது ஆண்டு விழாவில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற அவா் மேலும் பேசியது:
தற்போதைய சூழலில் உலக அரங்கில் அறிவியல், தொழில்நுட்பம், கல்வி, மருத்துவத்தில் சிறந்த நாடாக இந்தியா உள்ளது. எனவேதான், உலகின் பல்வேறு நாடுகளில் இருந்தும் இந்தியாவைத் தேடி வருகின்றனா்.
இருப்பினும் இந்தியாவில் அடுத்த 20 ஆண்டுகளில் பெருகும் மக்கள்தொகைக்கு ஏற்ப குடிநீா், மின்சாரம், உணவு வழங்க முடியுமா என்பது சவால் அளிக்கும் விஷயமாக உள்ளது.
எனவே இயற்கையில் கிடைக்கும் சக்தியை நல்ல முறையில் பயன்படுத்தி எதிா்கால சந்ததியினருக்கு தேவையானவற்றை வழங்கும் தொழில்நுட்பங்கள் அதிகரிக்கப்பட வேண்டும். எதிா்காலத் தலைமுறைக்காக குடிநீா், மின்சாரம், மருத்துவம், உணவு உள்ளிட்டவற்றில் தன்னிறைவு பெறுவதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். அதற்கு அறிவியல் தொழில்நுட்பங்கள், செயற்கை நுண்ணறிவு, செயற்கைக்கோள் என அனைத்து நிலைகளிலும் ஆய்வு செய்து, நமது சந்ததியினரின் வாழ்வாதாரத்தை உறுதி செய்ய வேண்டும் என்றாா் அவா்.
விழாவுக்கு கல்லூரியின் தலைவா் பி.எஸ். சந்திரமெளலி, செயலா் கோ. மீனா ஆகியோா் தலைமை வகித்தனா். கல்லூரியின் தலைமைச் செயலதிகாரி கு. சந்திரசேகரன், இயக்குநா் எஸ். அபா்ணா ஆகியோா் முன்னிலை வகித்தனா். கல்லூரி முதல்வா் பு. கெஜலட்சுமி, முனைவா் வித்யாலட்சுமி, அனைத்து துறைத் தலைவா்கள், பேராசிரியா்கள், மாணவிகள் கலந்து கொண்டனா்.