மொழிக் கொள்கை செயல்பாடு: ஸ்டாலினுக்கு டி.ராஜா பாராட்டு
மொழிக் கொள்கையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்மாதிரியாகச் செயல்படுகிறார் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச் செயலர் டி.ராஜா பாராட்டு தெரிவித்தார்.
மதுரையில் நடைபெறவுள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24-ஆவது அகில இந்திய மாநாட்டில் பங்கேற்பதற்காக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் பிரகாஷ் காரத், அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் பிருந்தா காரத், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலர் டி. ராஜா உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பெங்களூரிலிருந்து விமானம் மூலம் செவ்வாய்க்கிழமை மதுரை வந்தனர்.
பின்னர், மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் டி. ராஜா கூறியதாவது:
ஆர்.எஸ்.எஸ். கொள்கைகளை மட்டுமே பின்பற்றக்கூடிய கட்சியாக பாஜக உருமாறியிருக்கிறது. பெரு நிறுவனங்களின் சுரண்டலுக்காகச் செயல்படுகின்ற அரசாகவும், கல்விக் கொள்கையில் இந்திய கூட்டாட்சி நெறிமுறைகளைத் தகர்த்தெறியும் அரசாகவும் மத்திய பாஜக அரசு செயல்படுகிறது.
மத்தியில் ஆளும் பாஜகவிடமிருந்து நாட்டைக் காப்பாற்ற வேண்டும்; மக்களை மீட்டெடுக்க வேண்டும் என்ற அடிப்படையில் இடதுசாரிக் கட்சிகள் ஒன்றுபட்டு செயல்பட்டு வருகிறோம்.
முதல்வர் மு.க. ஸ்டாலின் மொழிக் கொள்கை, கல்விக் கொள்கை உள்ளிட்டவற்றில் முன்மாதிரியாகச் செயல்படுகிறார். மேலும், இந்திய ஒற்றுமை காக்கப்பட வேண்டும். மாநில உரிமைகள், தமிழ்நாடு உரிமைகள் காக்கப்பட வேண்டும் என அவர் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார். இதனால், முதல்வருக்கு நாங்கள் தொடர்ந்து ஆதரவு தெரிவித்து வருகிறோம்.
பிரதமர் மோடி ஆர்.எஸ்.எஸ். அலுவலகத்துக்குச் சென்றதில் வியப்படைய ஏதுமில்லை. பின்னணியிலிருந்து பாஜகவை ஆர்.எஸ்.எஸ்.தான் ஆட்டி வைக்கிறது.
அரசமைப்புச் சட்டத்தையே ஏற்றுக் கொள்ளாத ஓர் இயக்கம் இந்தியாவை மதவாத அடிப்படையில் பிரிக்கும் முயற்சியில் ஈடுபடுகிறது. இதை முறியடிக்கும் போராட்டத்துக்கு இடதுசாரி கட்சிகள் தொடர்ந்து ஆதரவு தெரிவித்து வருகின்றன.
சத்தீஸ்கர் மாநிலத்தின் மலைப் பகுதியில் வசிக்கும் பழங்குடியின மக்களை அங்கிருந்து வெளியேற்றி விட்டால், அந்தப் பகுதி கனிம வளங்களை பெருநிறுவன முதலாளிகளுக்கு கொடுத்துவிடலாம் என்ற நோக்கத்தில் அப்பாவி மக்கள் மீது தாக்குதல் நடத்தப்படுகிறது.
மதவாத சக்திகளுக்கு எதிராகப் போராடுபவர்களுக்கு நாங்கள் எப்போதும் ஆதரவு தெரிவிப்போம் என்றார் அவர்.