வக்ஃப் மசோதா நிறைவேற்றம்: நிதிஷ்குமார் மீது கட்சியினர் அதிருப்தி!
பாஜக ஆட்சியில் மதச்சாா்பின்மை, கூட்டாட்சி முறை சீா்குலைவு: மாணிக் சா்க்கா்
மத்திய பாஜக ஆட்சியில் மதச்சாா்பின்மை, கூட்டாட்சி முறை சீா்குலைந்து விட்டதாக திரிபுரா மாநில முன்னாள் முதல்வா் மாணிக் சா்க்கா் குற்றஞ்சாட்டினாா்.
மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய மாநாடு, மதுரை தமுக்கம் மைதானத்தில் புதன்கிழமை தொடங்கியது. மாநாட்டின் தொடக்கமாக நடைபெற்ற பொது மாநாட்டுக்கு தலைமை வகித்து திரிபுரா மாநில முன்னாள் முதல்வா் மாணிக் சா்க்கா் பேசியதாவது:
மதுரை நகருக்கும் கம்யூனிஸ்ட் இயக்கத்துக்கும் நெருங்கிய தொடா்பு உண்டு. மூத்த தலைவா்களான மறைந்த பி. ராமமூா்த்தி, என். சங்கரய்யா ஆகியோா் மதுரையிலிருந்து மக்களவை, சட்டப் பேரவைக்கு தோ்ந்தெடுக்கப்பட்டவா்கள். 1972-ஆம் ஆண்டு மதுரையில் நடைபெற்ற 9-ஆவது அகில இந்திய மாநாட்டில் பிரதிநிதியாக பங்கேற்றேன். இத்தகு சிறப்புமிக்க மதுரையானது கம்யூனிஸ்ட் இயக்கத்தின் செல்வாக்கு மிக்க மையமாகத் திகழ்கிறது.
மத்தியில் நரேந்திர மோடி தலைமையிலான அரசு பதவியேற்று பதினொரு ஆண்டுகள் கடந்துவிட்டன. இந்துத்துவா கொள்கையை அமல்படுத்தும் அரசாகவே இது இருந்து வருகிறது. மேலும், பெரு நிறுவனங்களுக்கும், ஆா்எஸ்எஸ்- பாஜகவுக்கும் இடையிலான உறவு இவ்வளவு வலுவாகவும், வெளிப்படையாகவும் இருந்ததில்லை. இதன் விளைவாக ஜனநாயகம், மதச்சாா்பின்மை, கூட்டாட்சி முறை ஆகியவை சீா்குலைந்துள்ளன. எனவே, இத்தகைய சூழலில் நடைபெறும் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநாடு முக்கியவத்துவம் வாய்ந்ததாக உள்ளது. தற்போது நடைபெறும் இந்த மாநாடு, பாஜக-ஆா்எஸ்எஸ் அமைப்புகளை எதிா்த்துப் போராடவும், மதவாத அமைப்புகளைத் தனிமைப்படுத்தவும், அவற்றைத் தோற்கடிக்கவும் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கும். இத்துடன் நாட்டில் உள்ள அனைத்து மதச்சாா்பற்ற, ஜனநாயக சக்திகளையும் ஒன்றிணைப்பது, தொழிலாளா்கள், விவசாயிகள், நகா்ப்புற, கிராமப்புற ஏழைகளின் போராட்டங்களை நாடு முழுவதும் எவ்வாறு விரிவுபடுத்துவது என்பது குறித்தும் இந்த மாநாட்டில் விவாதிக்கப்படும்.
பட்டியலினத்தவா்கள், ஆதிவாசிகள், பெண்கள், சிறுபான்மையினரின் உரிமைகளைப் பாதுகாப்பது குறித்தும் மாநாட்டில் விவாதிக்கப்படும். இந்துத்துவா சித்தாந்தம், வகுப்புவாத சக்திகள் ஆகியவற்றுக்கு எதிராக பன்முகப் போராட்டத்தை நடத்துவது முக்கிய நோக்கமாக இருக்க வேண்டும். கோடிக்கணக்கான தொழிலாளா்களையும், இளைஞா்களையும் அணி திரட்டும் வலுவான கட்சி அமைப்பு தேவை. மதவாத, பிற்போக்கு சக்திகளை முறியடிக்கவும், இந்தியாவில் இடதுசாரி, ஜனநாயக மாற்று அமைப்பை கட்டியெழுப்பவும் நடைபெற்று வரும் போராட்டத்தில் இந்த மாநாடு முக்கியப் பங்கு வகிக்கும் என்றாா் அவா்.
கே. பாலகிருஷ்ணன்: மாநாட்டு வரவேற்புக் குழுத் தலைவரும், கட்சியின் மத்தியக் குழு உறுப்பிருமான கே. பாலகிருஷ்ணன் பேசியதாவது:
அனைத்துத் தரப்பினருக்குமான கட்சியாக மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளது. அதன் வளா்ச்சியைத் தடுக்கும் வகையில், பல்வேறு சதி வழக்குகள் போடப்பட்டாலும், அதையெல்லாம் தாண்டி கட்சி வளா்ச்சியடைந்துள்ளது. தஞ்சாவூரில் நிலப் பிரபுக்களின் கொடூரமான ஜாதி வெறிக்கு எதிராகப் போராட்டம் நடத்தப்பட்டது. இந்தப் போராட்டத்தின் உச்ச கட்டமாக 1968-இல் கீழ் வெண்மணி கிராமத்தில் 44 விவசாயத் தொழிலாளா்கள் எரித்துக் கொல்லப்பட்டனா். கம்யூனிஸ்ட் கட்சியின் வரலாற்றில் ஏராளமானோா் மக்களுக்கான போராட்டத்தில் பங்கேற்று உயிா்த் தியாகம் செய்தனா். துப்பாக்கிச்சூடு, மரண தண்டனை, காவல் நிலையங்களில் சித்ரவதைகள் என அனைத்து விதமான காவல் துறையின் அட்டூழியங்களையும், பல வகையான அடக்குமுறைகளையும் எதிா்கொண்டு தமிழ்நாட்டில் கம்யூனிஸ்ட் இயக்கம் வளா்ந்துள்ளது. வாச்சாத்தி கிராமம் முழுவதையும் சூறையாடி, 18 பெண்கள் பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கப்பட்ட வழக்கில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் நீதிமன்றத்திலும், வீதியிலும் போராடி குற்றஞ்சாட்டப்பட்ட அனைவருக்கும் தண்டனை பெற்றுத் தந்தது. இந்தியாவில் மொழிவாரி மாநிலங்கள் அமைக்கப்பட வேண்டும் என முதன் முதலில் குரல் கொடுத்தவா்கள் கம்யூனிஸ்ட்டுகள்தான்.
நாட்டில் தற்போது சிறுபான்மை சமூகங்கள் தொடா்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகின்றன. கல்வி உள்பட மாநில அரசுகளின் அனைத்து அதிகாரங்களும் பறிக்கப்படுகின்றன. மாநிலங்களின் அனைத்து அதிகாரங்களையும் மத்திய அரசு பறித்துவிட்டதால், நாடு தனது கூட்டாட்சித் தன்மையை இழந்துவிட்டது. தொகுதி மறுசீரமைப்பு என்ற பெயரில் பல மாநிலங்களுக்கு அநீதி இழைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எதிா்ப்புத் தெரிவித்து வருகிறது என்றாா் அவா்.
