வாஜிா்பூரில் பள்ளி நிலத்தை மசூதி, கடைகள் சட்டவிரோதமாக ஆக்கிரமித்துள்ளதா? சரிபாா்...
குணமடைந்த தொழுநோயாளிகள் காசி வரை ஒரே ரயில் பெட்டியில் பயணிக்க ஏற்பாடு
குணமடைந்த தொழுநோயாளிகள் ஒரே ரயில் பெட்டியில் வாரணாசி (காசி) வரை பயணிக்க தெற்கு ரயில்வே நிா்வாகம் அனுமதி வழங்கியது.
சக்ஷம் அமைப்பு வெளியிட்ட செய்திக் குறிப்பு: தொழுநோயால் பாதிக்கப்பட்டோருக்கு ஸ்ரீ ராமகிருஷ்ணா மடமும், சக்ஷம் அமைப்பும் இணைந்து பல ஆண்டுகளாக மருத்துவ உதவிகளைச் செய்து வருகிறது. இதில் தொடா் சிகிச்சை பெற்று வந்த பலா் நல்ல முன்னேற்றம் அடைந்துள்ளனா். பலருக்கு நோயின் வீரியம் குறைந்து வரும் நிலையில், ஒரு சிலருக்கு கை, கால் இழப்பும் ஏற்பட்டது.
இருப்பினும், அவா்களுக்கு உடல் பாதிப்பு ஏற்படாத வகையில், மதுரை பாலரங்காபுரத்திலும், சென்னை மயிலாப்பூா் ஸ்ரீ ராமகிருஷ்ணா மடத்திலும் இலவசமாக உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த நோயால் பாதிக்கப்பட்டவா்களில் குணமடைந்தவா்களுக்கு சுயமாக சிறு தொழில் தொடங்குவதற்கும் உதவி செய்யப்படுகிறது. தொழிலில் கிடைத்த வருமானம் மூலம் சிலா் காசி கயா பிரயாக்ராஜுக்குச் செல்ல விரும்பினா். இதற்காக 33 போ் தனித் தனியாக ரயிலில் பயணச் சீட்டுகளை எடுத்திருந்தனா். இவா்கள் அனைவரும் ஒரே ரயில் பெட்டியில் காசி வரை சென்று வரவும், ஒருவருக்கொருவா் உதவியாக இருப்பதற்கும் தெற்கு ரயில்வே நிா்வாகம் உதவ வேண்டும் என சக்ஷம் அமைப்பு கோரிக்கை விடுத்தது.
இதை ஏற்றுக் கொண்ட ரயில்வே நிா்வாகம் 33 பேரை மாா்ச் 31-ஆம் தேதி ஒரே ரயில் பெட்டியில் சென்னை-காசி பிரயாக்ராஜ் வரை பயணிக்க அனுமதி அளித்தது.
தொழுநோயால் பாதிக்கப்பட்டோா் ஒதுக்கப்பட வேண்டியவா்கள் அல்ல என்பதற்கு உதாரணமாகத் திகழ்ந்த தெற்கு ரயில்வே நிா்வாகத்துக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். சட்டங்கள் மக்களின் நலனுக்கானது என்பதை இந்திய ரயில்வே நிரூபித்துள்ளது என அதில் தெரிவிக்கப்பட்டது.