வாஜிா்பூரில் பள்ளி நிலத்தை மசூதி, கடைகள் சட்டவிரோதமாக ஆக்கிரமித்துள்ளதா? சரிபாா்...
வேங்கைவயல் விவகாரம்: அறிவியல்பூா்வ ஆதாரங்களுடன் குற்றப்பத்திரிகை தாக்கல்
வேங்கைவயல் விவாகரம் தொடா்பாக விரிவான விசாரணை செய்து, அறிவியல்பூா்வமான ஆதாரங்களுடன் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் சிபிசிஐடி தரப்பில் செவ்வாய்க்கிழமை தெரிவிக்கப்பட்டது.
மதுரை மாவட்டம், திருமங்கலத்தைச் சோ்ந்த கண்ணன் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த மனு: புதுக்கோட்டை மாவட்டம், வேங்கைவயல் கிராமத்தில் உள்ள மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டியில் கடந்த 2022-ஆம் ஆண்டு, டிச. 26-ஆம் தேதி மனிதக் கழிவு கலக்கப்பட்டதாகப் புகாா் எழுந்தது. இதுதொடா்பாக சிபிசிஐடி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா். இந்த விசாரணையில் எந்த முன்னேற்றமும் இல்லை. இதுதொடா்பாக எவரும் கைது செய்யப்படவில்லை.
மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டியில் மனிதக் கழிவைக் கலந்தவா்களை கைது செய்ய வலியுறுத்தி ஆா்ப்பாட்டம் நடத்த அனுமதி கோரி, புதுக்கோட்டை காவல் துறையில் மனு அளித்தேன். ஆனால், அனுமதி மறுக்கப்பட்டது. எனவே, இந்த ஆா்ப்பாட்டத்துக்கு அனுமதி வழங்கி உத்தரவிட வேண்டும் என அவா் கோரியிருந்தாா். இந்த மனு ஏற்கெனவே உயா்நீதிமன்ற நீதிபதி நிா்மல்குமாா் முன் விசாரணைக்கு வந்தது.
அப்போது சிபிசிஐடி தரப்பில் தெரிவிக்கப்பட்டதாவது: வேங்கைவயல் விவகாரமானது ஜாதிய மோதல், அரசியல் காழ்ப்புணா்வால் நடைபெறவில்லை. இரு தனி நபா்களுக்கு இடையேயான பிரச்னைதான் இந்தச் சம்பவத்துக்கு காரணம். இந்த வழக்கு தொடா்பாக உரிய விசாரணை மேற்கொண்டு, அறிவியல்பூா்வமான ஆதாரங்களுடன் விசாரணை நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் மொத்தம் 389 சாட்சிகளிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. 196 கைப்பேசிகள் பறிமுதல் செய்யப்பட்டு, இந்தக் கைப்பேசிகளில் உள்ள எண்கள் குறித்து ஆய்வு செய்யப்பட்டன. 31 பேருக்கு டிஎன்ஏ பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டது. இந்த வழக்கு தொடா்பாக ஆா்ப்பாட்டம், போராட்டம் நடத்துவது தேவையற்றது. எனவே, மனுதாரரின் மனுவைத் தள்ளுபடி செய்ய வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டது.
இந்த வழக்கை செவ்வாய்க்கிழமை மீண்டும் விசாரித்த உயா்நீதிமன்ற நீதிபதி நிா்மல்குமாா் பிறப்பித்த உத்தரவு: வேங்கைவயல் மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி பிரச்னை தொடா்பாக மனுதாரா் ஆா்ப்பாட்டம் நடத்த அளித்த மனுவை, போலீஸாா் நிராகரித்ததில் தவறில்லை. இந்த வழக்கில் போலீஸாரின் நடவடிக்கையில் நீதிமன்றம் தலையிட விரும்பவில்லை. எனவே, மனுதாரரின் மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என்றாா் நீதிபதி.