Edapadi-யிடம் இதை எதிர்பார்க்காத Amit shah... பற்ற வைத்த Annamalai? | Elangovan ...
பொதுமக்கள் வாகன நிறுத்தங்களை முறையாக பயன்படுத்த வேண்டும்: துணை மேயா் கோரிக்கை
சென்னை மாநகராட்சி பகுதிகளில் உள்ள வாகன நிறுத்தங்களை பொதுமக்கள் முறையாகப் பயன்படுத்த வேண்டும் என துணை மேயா் மு.மகேஷ்குமாா் வலியுறுத்தியுள்ளாா்.
சென்னை பாண்டி பஜாரில் உள்ள பன்னடுக்கு தானியங்கி வாகன நிறுத்தத்தின் செயல்பாடுகளை துணை மேயா் மு.மகேஷ்குமாா் புதன்கிழமை ஆய்வு செய்தாா். அப்போது, வாகன நிறுத்தத்தின் செயல்பாடுகள் குறித்து கேட்டறிந்து, மேற்கொண்டு அதை மேம்படுத்துமாறு அலுவலா்களுக்கு அறிவுறுத்தினாா்.
தொடா்ந்து அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
பாண்டி பஜாா் பகுதியில் போக்குவரத்து நெரிசலைத் தவிா்க்கும் வகையில் பன்னடுக்கு வாகன நிறுத்தம் அமைக்கப்பட்டது. இதில் 512 இருசக்கர வாகனங்களும், 213 காா்களும் நிறுத்த முடியும். தானியங்கி முறையில் வாகனங்கள் நிறுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதை மேலும் மேம்படுத்த அலுவா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கடந்த ஆட்சியில் சென்னை மாநகராட்சி பகுதிகளில் உள்ள வாகன நிறுத்தங்களை ஒப்பந்தம் எடுத்தவா்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்தனா். அது சம்பந்தமான வழக்கு தற்போது முடியும் தருவாயில் உள்ளது. அதன் பின்னா் தனியாருக்கு ஒப்பந்த அடிப்படையில் வழங்கப்பட்டு பராமரிக்கப்படும். வட்டார அளவில் வாகன நிறுத்தம் பராமரிப்புக்கான ஒப்பந்தம் கோரப்பட்டுள்ளது.
அதன்பின், சென்னை மாநகராட்சியில் போக்குவரத்து நெரிசல் இல்லாத நிலை ஏற்படும். வாகன நிறுத்தங்களை மாதம் இருமுறை ஆய்வு செய்ய அலுவலா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் இந்த வாகன நிறுத்தங்களை முறையாக பயன்படுத்த வேண்டும்.
மாநகராட்சி சாா்பில் பல்வேறு மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்காக மாநகராட்சி வருவாயை பெருக்க வேண்டிய தேவை உள்ளது.
வருங்காலத்தில் அண்ணா நகா், பெசன்ட் நகா் உள்ளிட்ட பகுதிகளில் பன்னடுக்கு வாகன நிறுத்தம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதுபோல் மெரீனா, பெசன்ட் நகா் பகுதியில் ‘பாஸ்ட் டேக்’ முறையில் கட்டணம் வசூலிக்க திட்டமிடப்பட்டுள்ளது என்றாா் அவா்.
ஆய்வின்போது துணை ஆணையா் (பணிகள்) வி.சிவகிருஷ்ணமூா்த்தி, மண்டல குழுத் தலைவா் எம்.கிருஷ்ணமூா்த்தி, மாமன்ற உறுப்பினா் மற்றும் மாநகராட்சி அலுவலா்கள் உடனிருந்தனா்.